சிங்கப்பூர், சீனா கடற்படைப் பயிற்சி

1 mins read
f9448b58-9026-4ee0-a4d9-ec083973e76c
சிங்கப்பூர் கடற்படையின் ‘ஆர்எஸ்எஸ் ஸ்டால்வர்ட்’ கப்பல், ‘எக்சர்சைஸ் மெரிடைம் கார்ப்பரேஷன்’ எனும் பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூர் கடற்படையும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவமும் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் செப்டம்பர் 5ஆம் தேதிவரை இருதரப்புப் பயிற்சியை நடத்துகின்றன.

‘எக்சர்சைஸ் மெரிடைம் கார்ப்பரேஷன்’ எனும் அப்பயிற்சி 2015ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மூன்றாம் முறையாக நடத்தப்படுகிறது. அதில் ‘ஆர்எஸ்எஸ் ஸ்டால்வர்ட்’ கப்பல் பயன்படுத்தப்படுவதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

முன்னதாக ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இரு கடற்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு, ஹெலிகாப்டர் தரையிறக்கம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதாக அமைச்சு கூறியது.

மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படைக் கப்பல்கள் மேற்கொள்ளும் வெவ்வேறு பணிகளை ‘ஆர்எஸ்எஸ் ஸ்டால்வர்ட்’ கப்பல் பார்வையிடும்.

பயிற்சியின் தொடக்கவிழா சீனாவின் ஸான்ஜியாங்கில் உள்ள ‘மா சியே’ கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. அதில் இரு கடற்படைகளையும் சேர்ந்த ஏறக்குறைய 200 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அந்தப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, நட்பார்ந்த தற்காப்பு உறவைப் பிரதிபலிப்பதாக சிங்கப்பூர் கடற்படைக் கப்பல் தளபதி ரியர் அட்மிரல் குவான் ஹொன் சுவொங் கூறினார்.

“இந்தப் பயிற்சி ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக்கொள்வது, பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பது, நட்புகளை அமைப்பது போன்ற விலைமதிப்பற்ற வாய்ப்புகளைத் தொடர்ந்து இரண்டு கடற்படைகளுக்கும் வழங்கியுள்ளது,” என்றார் அவர்.

அந்தப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, நட்பார்ந்த இருதரப்புத் தற்காப்பு உறவை வலியுறுத்துவதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்