சிங்கப்பூர் - பிரான்ஸ் 60 ஆண்டு உறவு நன்மை அளித்துள்ளது: அதிபர் தர்மன்

2 mins read
53c9018a-e3ef-4dc6-98d0-d0a269b8b27b
ராஃபிள்ஸ் ஹோட்டலில் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் உள்ளிட்டோருக்காக நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவானது பொருளியல் ஒத்துழைப்பு, புத்தாக்கம் மூலம் இருநாட்டு மக்களுக்கும் நேரடியான பலனை அளித்துள்ளதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனுக்கும் அவரது மனைவிக்கும் ராஃபிள்ஸ் ஹோட்டலில் அளிக்கப்பட்ட அரச விருந்து நிகழ்ச்சியின்போது அதிபர் தர்மன் பேசினார்.

சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையே புதிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதை அடுத்து திரு தர்மன் உரையாற்றினார்.

விருந்து நிகழ்ச்சியில் சிங்கப்பூர், பிரெஞ்சு அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
விருந்து நிகழ்ச்சியில் சிங்கப்பூர், பிரெஞ்சு அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

“நமது உறவை விரிவுபடுத்தி தனித்துவமான இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய ஒன்றாக உருவாக்குகிறோம்,” என்றார் அவர்.

இருநாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டத்திடம் பேசிய அவர், “உங்கள் வருகையும் ‌‌ஷங்ரிலா கலந்துரையாடலில் நீங்கள் உரையாற்றவிருப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணக்கத்தைக் காட்டுகிறது,” என்றார்.

திறந்த, நிலையான, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலகக் கட்டமைப்பு அவசியம் என்ற அடிப்படை நம்பிக்கையை சிங்கப்பூரும் பிரான்சும் கொண்டிருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.

அவருக்குப்பின் பேசிய பிரான்ஸ் அதிபர் மெக்ரோன், “60 ஆண்டுகள் கழித்து நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்ல முடியும்... 60 ஆண்டு கலந்துரையாடல்கள், இருநாட்டுப் பயணங்கள், பொது நிகழ்ச்சிகள்,” என்றார் அவர்.

அதிபர் தர்மனை அடுத்து பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோன் உரையாற்றினார்.
அதிபர் தர்மனை அடுத்து பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோன் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

“சிங்கப்பூருக்குத் திரு மெக்ரோன் மேற்கொண்ட பயணம் சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையில் இருக்க்ம் 60 ஆண்டுகால அரசதந்திர உறவைப் பறைசாற்றுகிறது. ஆனால் அந்த உறவு அதற்கும் முன்னரே தொடங்கியது,” என்றார் திரு தர்மன்.

பிரெஞ்சு சமயப் போதகரும் கல்வியாளருமான அருள்தந்தை ஜோன் மரி பியுரெல் செயிண்ட் ஜோசஃப் கழகம் போன்ற பல பள்ளிகளை எவ்வாறு நிறுவ உதவினார் என்பதைத் திரு தர்மன் சுட்டினார்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்களில் பிரெஞ்சு நிறுவனங்களே ஆக அதிக எண்ணிக்கையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரெஞ்சு நிபுணர்களும் சிங்கப்பூரின் நகர உள்கட்டமைப்பை வடிவமைக்க உதவுவதைத் திரு தர்மன் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்