பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் அணுக்கமாக ஒத்துழைக்க சிங்கப்பூரும் ஜெர்மனியும் முடிவு செய்துள்ளன. தங்களுக்கு இடையிலான உறவை உத்திப்பூர்வ பங்காளித்துவ நிலைக்கு மேம்படுத்த இவ்விரு நாடுகளும் முடிவு செய்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.
பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 17ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸீம் (Olaf scholz) கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டுக்கு இடையில் நவம்பர் 18ஆம் தேதி இரு நாட்டுப் பிரதமரும் சந்தித்துப் பேசினர்.
உத்திப்பூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டங்களின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்துவரும் துறைகளின்மீது உள்ள ஆர்வத்தை உத்திப்பூர்வமாக ஒருங்கிணைக்க உயர்மட்ட அதிகாரிகளின் வருகைகளையும் சந்திப்புகளையும் அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு தரப்பிலும் உள்ள ராணுவத்தினர் மின்னிலக்க மயமாக்கல், இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவர். அதேநேரத்தில் இரு நாடுகளும் தற்காப்புத் தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வதற்குத் தேவையான அமைப்பை உருவாக்கும் எனக் கூறப்பட்டது.