சிங்கப்பூர், இந்திய ராணுவங்கள் 13ஆம் முறையாக நடத்தப்பட்ட ‘எக்சர்சைஸ் அக்னி வோரியர் 2024’ பயிற்சியை இந்தியாவின் தேவ்லாலியில் நடத்தியுள்ளன.
அந்தப் பயிற்சி நவம்பர் 12 முதல் நவம்பர் 30 வரை நடைபெற்றது.
இவ்வாண்டின் பயிற்சியில் சிங்கப்பூர், இந்திய ராணுவங்களைச் சேர்ந்த 290க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பீரங்கிப் படைப் பிரிவின் தலைமை அதிகாரி கர்னல் கோங் சியொ பெர்ங், பயிற்சியின்போது சிங்கப்பூர் ஆயுதப் படை பங்கேற்பாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள வலுவான தற்காப்பு உறவுக்கு இந்தப் பயிற்சி சான்றாக அமைகிறது. 23வது பிரிவு, ‘சிங்கப்பூர் ஆர்ட்டிலரி’, ‘255 மீடியம் ரெஜிமண்ட்’ ஆகியவற்றைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இடையிலான நிபுணத்துவப் பரிமாற்றங்கள் நமது செயல்திறனை மேம்படுத்தியதோடு, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தியும் உள்ளன,” என்றார் அவர்.
ராணுவ இருதரப்பு உடன்படிக்கையின்கீழ் ‘எக்சர்சைஸ் அக்னி வோரியர்’ பயிற்சி, 2004ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பார்ந்த, நீண்டகாலத் தற்காப்பு உறவை அது கோடிகாட்டுகிறது.
பயிற்சிகள் மூலம் வழக்கமான இருவழித் தொடர்பு, ராணுவப் பரிமாற்றங்கள், பயணங்கள், பயிற்சி வகுப்புகள், மற்ற நிபுணத்துவப் பரிமாற்றங்கள் ஆகியவற்றோடு சிங்கப்பூர் ஆயுதப் படையும் இந்திய ஆயுதப் படையும் ராணுவ ஒத்துழைப்பில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.