தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்பு உறவை வலுப்படுத்த சிங்கப்பூர், இந்தியா ஆலோசனை

2 mins read
கூட்டு ராணுவப் பயிற்சி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் நீட்டிப்பு
bbc70bab-9234-4454-bbe4-e46286ea35f7
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஆறாவது இந்தியா-சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர்நிலை சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். - படம்: தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூர், இந்திய ராணுவங்களுக்கு இடையே கூட்டு ராணுவப் பயிற்சி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு இரு நாடுகளும் நீட்டித்துள்ளன.

இருநாட்டு ராணுவங்களும் இணைந்து இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் புதுடெல்லியில் ஆறாவது இந்தியா-சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர்நிலை சந்திப்புக் கூட்டத்தில் இருநாட்டு தற்காப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியபோது இந்த ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டது.

இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் டாக்டர் இங் சந்தித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்தபோது அவரும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ திட்டம் ஒன்றின் தொடர்பில் இருதரப்பு உறவுகளை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல இணக்கம் கண்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூர், இந்தியா இடையே நிலவிவரும் சிறந்த இருதரப்பு உறவை அதிபர் முர்முவும் டாக்டர் இங்கும் மறுஉறுதிப்படுத்தினர். அத்துடன், இருநாட்டு அரசதந்திர உறவைக் குறிக்கும் 60 ஆண்டு நிறைவாக 2025ஆம் ஆண்டு அமையவிருப்பதைக் கொண்டாட இருவரும் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அமைச்சர்நிலைச் சந்திப்பின்போது தற்காப்பு உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து டாக்டர் இங்கும் திரு சிங்கும் பேசினர். இருநாடுகளின் கடற்படை, ஆகாயப்படை, ராணுவம் நடத்திவரும் கூட்டுப் பயிற்சித் திட்டங்களின் மூலம் ஒத்துழைப்பில் சிறந்த முன்னேற்றம் இருப்பதாக இருவரும் குறிப்பிட்டனர்.

குறிப்பாக, இருதரப்பு ராணுவ ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதை வரவேற்பதாக இருவரும் கூறினர். சிங்கப்பூர், இந்திய ராணுவங்களுக்கு இடையிலான உறவு, அவற்றின் பயிற்சி, மேம்பாட்டு வழிமுறைகள் ஆகியவை குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

தகவல் பகிர்வு, புதிய தொழில்நுட்பங்கள், தற்காப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு போன்ற அம்சங்களில் இந்தியாவுடனான தற்காப்பு ஏற்பாடுகளையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல டாக்டர் இங்கும் திரு சிங்கும் இணக்கம் கண்டனர்.

“மனங்களின் சந்திப்பாக இது இருந்ததுடன் எங்களின் தற்காப்பு ஒத்துழைப்பை மேலும் வலுவாக்கும் சந்திப்பாகவும் இது அமைந்தது,” என்று டாக்டர் இங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்