தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூமலைக்கு அருகே நிலப்பகுதிகளை மாற்றிக்கொள்ள சிங்கப்பூர் - ஜோகூர் ஆட்சியாளர் இணக்கம்

2 mins read
a25a29e2-4ade-4502-b611-8c2616250d8c
நிலப் பரிமாற்றத்தின்கீழ், தியெர்சால் அவென்யூவிற்கும் ஹாலந்து ரோட்டுகும் இடையிலான சாலைச் சந்திப்பில் உள்ள 13 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை சிங்கப்பூர் பெற்றுக்கொள்ளும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பூமலையை ஒட்டி அமைந்துள்ள, ஜோகூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான 13 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை அரசாங்கம் கையகப்படுத்தவிருக்கிறது.

சிங்கப்பூருக்கும் ஜோகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கும் இடையிலான நிலப் பரிமாற்ற ஒப்பந்தம் இதைச் சாத்தியமாக்குகிறது.

அந்த நிலப்பகுதிக்கு மாற்றாக அதற்கு அருகிலுள்ள 8.5 ஹெக்டர் அரசாங்க நிலப்பகுதி ஜோகூர் ஆட்சியாளருக்கு வழங்கப்படும்.

கட்டுப்பாட்டு ஆணையங்களின் ஒப்புதலுக்குப் பிறகு அந்த நிலப்பரப்பில் அவர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலும்.

நிலப் பரிமாற்றம் இந்த ஆண்டுப் (2025) பிற்பகுதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான ஒப்பந்தம் குறித்த தகவலைச் சிங்கப்பூர் நில ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிட்டன.

தியெர்சால் பார்க்கில் உள்ள நிலப்பகுதி 1800கள் முதற்கொண்டு ஜோகூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருந்துவருகிறது.

ஜோகூர் சுல்தானின் வரலாற்றுபூர்வமான சிங்கப்பூர் இல்லமாக அது விளங்குகிறது.

கடந்த பல ஆண்டுகளில் சிங்கப்பூர் அரசாங்கம் ஜோகூர் அரச குடும்பத்திடமிருந்து சில நிலப்பகுதிகளை வாங்கியதுண்டு. அவ்வாறு வாங்கப்பட்ட நிலத்தின் சில பகுதிகளில் பூமலையின் தியெர்சால், கேலப் பகுதியில் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி, பூமலை வட்டாரத்தில் 21.1 ஹெக்டர் நிலம் திரு துங்கு இஸ்மாயிலுக்குச் சொந்தமானது என்று ஆணையங்கள் தெரிவித்தன. நிலப் பரிமாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 13 ஹெக்டர் நிலப்பகுதியும் அதில் அடங்கும்.

பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 8.5 ஹெக்டர் நிலப்பகுதி, அந்த 21.1 ஹெக்டரில் எஞ்சியிருக்கும் 8.1 ஹெக்டர் நிலப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும்.

நிலப் பரிமாற்றத் திட்டம் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலப் பரிமாற்றத் திட்டம் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துங்கு இஸ்மாயில் தமது நிலப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளுக்குத் திட்டமிட்டிருப்பதாகவும் பூமலையிலிருந்து தொலைவில் அவர் அப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஆணையங்கள் கூறின.

பரிமாறிக்கொள்ளப்படும் நிலப்பகுதிகளின் சந்தை மதிப்பு, ஈடாக இருக்குமென்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வழங்கியது போக எஞ்சிய 8.1 ஹெக்டர் நிலப்பகுதி துங்கு இஸ்மாயிலுக்குச் சொந்தமாக இருக்குமென்றும் அவை குறிப்பிட்டன.

நிலப் பரிமாற்றம் நிறைவுபெற்ற பிறகு, ஜோகூர் ஆட்சியாளர் தமக்குச் சொந்தமான 8.5 ஹெக்டர், 8.1 ஹெக்டர் நிலப்பகுதிகளில், மிக நெருக்கமாக இல்லாத வகையில் குறைவான தளங்கள் கொண்ட குடியிருப்புகளைக் கட்டலாம்.

அதற்கான விண்ணப்பங்களை நகர மறுசீரமைப்பு ஆணையமும் இதர அமைப்புகளும் மதிப்பீடு செய்து, பரிந்துரைக்கப்படும் மேம்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா என்பதை உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்