மலேசியாவின் ஜோகூர் பாருவையும் சிங்கப்பூரையும் ரயில் பாதையால் இணைக்கும் ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தின் பயணக் கட்டணம், சேவை தொடங்கப்படும் சரியான தேதி குறித்து மலேசிய, சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர்கள் இணைந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பர். கட்டணம் குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார். இது மலேசியா, சிங்கப்பூர் இரு நாடுகளுக்கு இடையிலான திட்டம் என்பதால், ஒருதலைப்பட்சமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார். செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) புக்கிட் சகார் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் வளாகத்தையும் ஆர்டிஎஸ் கட்டுமானத் தளத்தையும் பார்வையிட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். ரயில் சேவையை இயக்கவுள்ள ‘ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ்’ நிறுவனம், பரிந்துரைக்கப்பட்ட கட்டண விகிதங்களை ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக ஏப்ரலில் திரு லோக் கூறியிருந்தார். ஆர்டிஎஸ் ரயில் திட்டம், ஏறக்குறைய 4 கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய தூர ரயில் இணைப்பாகும். இது ஜோகூர் பாருவின் புக்கிட் சகார், சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் என இரு நிலையங்களைக் கொண்டிருக்கும். ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு, ஒவ்வொரு திசையிலும் மணிக்கு 10,000 பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை தொடங்கப்பட்டதும், நாள்தோறும் ஏறக்குறைய 40,000 பேர் இதில் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் சகாரில் 600 எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்
இதற்கிடையே, புக்கிட் சகார் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் வளாகத்தில் ஏறக்குறைய 640 எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுள் ஏறத்தாழ 400 பேர் செகாமட்டில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் அக்டோபரில் புக்கிட் சகார் வளாகத்தில் பணியில் இணைவர் என்று எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை இயக்குநர் முகமது சுகைலி முகமது ஜைன் தெரிவித்தார். புதிய வளாகத்தில் பணிக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள, அக்டோபர் முதல் டிசம்பர் வரை அவர்கள் அங்குப் பயிற்சியில் பங்கேற்பர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று மாதகாலப் பயிற்சி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின்கீழ் செயல்படும் ஆறு முகவைகளைச் சேர்ந்த ஊழியர்கள் புதிய கட்டடம், பயணிகளின் எண்ணிக்கை, நவீன மின்னிலக்க அமைப்புகளைப் புரிந்துகொள்ளவும் பாவனைப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் கைகொடுக்கும். இந்த வளாகத்திற்காக 640 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றும் ஆணையர் சுகைலி தெரிவித்தார்.
மின்னிலக்க முறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், கைமுறைச் செயல்முறைகளும் தயாராக இருக்கும் என்று அவர் கூறினார்.


