அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைக்க சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணக்கம்

அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைக்க சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணக்கம்

2 mins read
1e70e65e-b803-4622-b6b5-0eeb6c718a5f
சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸனும் வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற வருடாந்தரத் தலைவர்கள் கூட்டத்தில் திங்கட்கிழமை (மே 4) கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரும் நியூசிலாந்தும் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்யப்போவதாகக் கூறியுள்ளன.

நெருக்கடிக்காலத்திலும் விநியோக நடவடிக்கைகள் சீராகச் செயல்படுவதற்கு வழிவிடும் உடன்பாட்டில் இருதரப்பும் திங்கட்கிழமை (மே 4) கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸனும் உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வைப் பார்வையிட்டனர். தற்காப்பு, பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு, உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.

“வர்த்தகம் தடையின்றி நடைபெற நாங்கள் துடிப்புடன் செயல்படுவோம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.

“இருநாடுகளுக்குமே இத்தகைய உடன்பாடு முதலாவது. உலக அளவிலும் இதுபோன்ற உடன்பாடு எட்டப்படுவது இதுவே முதன்முறை. இது தெளிவானதொரு கருத்தை முன்வைக்கிறது. சிரமமான காலத்திலும் நம்பகமான பங்காளித்துவ நாடுகள் ஒன்று மற்றதன்மீது நம்பிக்கை வைக்கும் என்பதே அது,” என்றார் அவர்.

சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள நியூசிலாந்துப் பிரதமர் லக்ஸனுடன் கலந்துகொண்ட கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

உணவு, எரிபொருள், சுகாதாரப் பராமரிப்பு, ரசாயனம், கட்டுமானப் பொருள்கள் முதலிய துறைகளின் வர்த்தகத்திற்குப் புதிய உடன்பாடு பொருந்தும். அந்தத் துறைகளில் தேவையற்ற ஏற்றுமதித் தடைகளை இருநாடுகளும் விதிக்கமாட்டா.

விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு வரும்போது இருதரப்பையும் சேர்ந்த வணிகங்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் அதிக நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கொடுக்கும் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.

பொருள்களின் விநியோகத்தை உறுதிசெய்வதற்குப் புதிய உடன்பாடு இருநாடுகளுக்கும் ஒரு கட்டமைப்பை நிறுவுவதாக அமைச்சு சொன்னது. விநியோக நடவடிக்கைகளுக்குச் சிக்கல் ஏற்படும்போது தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஆலோசனை நடத்தவும் அது வழிவிடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்