போலந்தும் சிங்கப்பூரும் தங்களது சொந்த வட்டாரங்களில் மையங்களாகத் திகழ்கின்றன. அவற்றுக்கிடையே வர்த்தக வாய்ப்புகளை ஆராய கூடுதலாகச் செய்யப்படலாம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூரிலுள்ள குட்வுட் பார்க் ஹோட்டலில் போலந்து அதிபர் ஆன்ட்ரஸெஜ் டுடாவையும் அவரது மனைவி அகத்தா கோர்ன்ஹவுஸர் டுடாவையும் கெளரவப்படுத்தும் நோக்கில் அவர், அரசாங்க விருந்தில் பேசிக்கொண்டிருந்தபோது இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூரில் திரு டுடாவின் வருகை ஜூன் 11 முதல் 13 வரை நீடிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சிங்கப்பூரின் 13வது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக போலந்து உள்ளது.
2024ல் மொத்த இருநாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 1.7 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.
2019ல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், பொருள்களுக்கும் சேவைகளுக்குமான இருநாட்டு வர்த்தகம் 2019லிருந்து 50 விழுக்காடு கூடியுள்ளது.
“நமது வட்டாரங்களில் மையப்புள்ளிகளாகத் திகழும் நம் நாடுகள் இரண்டும், ஒன்று மற்றொன்றின் பலத்தைப் பயன்படுத்த நிறைய பங்களிக்க முடியும்,” என்று திரு தர்மன் கூறினார்.