சிங்கப்பூரும் கத்தாரும் எரிசக்திப் பாதுகாப்பு, சீரான விநியோக நடவடிக்கைகள் முதலியவற்றை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மின்னிலக்கமயமாக்கல் போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகளை இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கத்தார் தலைநகர் தோஹாவுக்குத் திரு வோங் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் அவர் பேச்சு நடத்தினார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, திரு வோங் மத்திய கிழக்கிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. பயணத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 20 முதல் 22 வரை அபுதாபிக்கும் துபாய்க்கும் அவர் செல்லவிருக்கிறார்.
உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் வேளையில், சிங்கப்பூரும் கத்தாரும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதும் மிக முக்கியம் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார். அக்டோபர் 19ஆம் தேதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் அந்தக் கருத்துகளை அவர் முன்வைத்தார்.
கத்தார் வெளியுறவு அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் ஷேக் முகம்மதுடன் அக்டோபர் 18ஆம் தேதி திரு வோங் பேச்சு நடத்தினார். அப்போது, தலைவர்கள் இருவரும் மத்திய கிழக்கின் அண்மை நிலவரம் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அந்த வட்டாரத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுகளை முன்னெடுப்பதிலும் கத்தார் வகிக்கும் முக்கியப் பங்கிற்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
“அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து அரசதந்திர வழிகளைப் பின்பற்றி, நீடித்த அமைதி, நிலைத்தன்மையை நோக்கிச் செயல்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்க-ஈரான் போர், காஸாவில் நடந்துவரும் மோதல்கள் போன்ற பல விவகாரங்களில் கத்தார் முக்கியச் சமரசப் பேச்சாளராகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இரு நாடுகளையும் சேர்ந்த அமைச்சர்களுக்கு இடையே 10க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடைபெற்ற நிலையில், பிரதமர் வோங் தற்போது தோஹாவிற்குச் சென்றுள்ளார்.
அக்டோபர் 18ஆம் தேதி தோஹாவின் ஹமாத் அனைத்துலக விமான நிலையத்தில் பிரதமர் வோங்கைக் கத்தாரின் சுற்றுப்புற, பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அப்துல்லா அப்துல் அஜிஸ் துர்கி அல் சுபை வரவேற்றார்.
வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகளில் சிங்கப்பூரின் மூன்றாவது மிகப் பெரிய சரக்கு வர்த்தகப் பங்காளியாகக் கத்தார் விளங்குகிறது. 2025ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்தச் சரக்கு வர்த்தகம் $8.53 பில்லியனை எட்டியது.
மேலும் திரவ இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, உலகின் பெரிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் கத்தார் திகழ்கிறது. சிங்கப்பூருக்குத் திரவ இயற்கை எரிவாயுவை அதிக அளவில் விநியோகிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று.
