சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மேலும் கணிசமான ஒத்துழைப்பு

2 mins read
3a89852b-b913-429d-9585-504d37b489a3
அதிபர் தர்மன் சண்முகரத்னம் (வலது), தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை, அக்டோபர் 8ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வரவேற்றார். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

பிரச்சினைகள் நிறைந்த உலகில், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுக்கிடையேயான பங்காளித்துவம் முன்னெப்போதையும்விட முக்கியமானது.

அந்த வகையில், சிங்கப்பூரும் தென்கொரியாவும் புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் முதல் உணவுப் பாதுகாப்பு வரையிலான துறைகளில் தங்கள் உறவை ஆழப்படுத்தி விரிவுபடுத்துகின்றன என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அக்டோபர் 8ஆம் தேதி கூறினார்.

“இரு நாடுகளும் 2025ஆம் ஆண்டில் ஓர் உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் பணியாற்றும். அரசதந்திர உறவுகள் தொடங்கப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது ஒரு சரியான மைல்கல்லாக இருக்கும்,” என்று தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் உடனான கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங் கூறினார்.

“மேம்படுத்துதல் என்பது பெயரில் மட்டும் மாற்றம் இல்லை. இது மேலும் கணிசமான ஒத்துழைப்பைக் குறிக்கிறது,” என்றும் திரு வோங் விவரித்தார்.

இரு நாடுகளும் இன்றைய மின்னிலக்க யுகத்தில் தங்கள் பொருளியல்களின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் கொரியா - சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் கூறினார். இந்த வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 2006ல் நடைமுறைக்கு வந்தது.

விமானப் பயணத்திற்கான வலுவான தேவையைப் பூர்த்தி செய்ய தற்போதுள்ள விமானச் சேவை ஒப்பந்தத்தை விரிவுபடுத்தவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். இந்த ஒப்பந்தம் கடைசியாக நவம்பர் 2019ல் விரிவாக்கப்பட்டது.

பாதுகாப்பு, கல்வி, பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இருதரப்பும் விவாதித்து வருகின்றன.

“வரவிருக்கும் மாதங்களில் இந்தப் பிரச்சினைகள் அனைத்திலும் கணிசமான முன்னேற்றத்தை நான் காண விரும்புகிறேன்,” என்று பிரதமர் வோங் கூறினார்.

“தென்கொரியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன். மேலும், எங்களது இருதரப்பு உறவுகளை அடுத்த மேல்நிலைக்குக் கொண்டுசெல்வதற்கு அதிபர் யூனுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் 8 ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தால் வரவேற்கப்பட்ட திரு யூன், உறவுகளில் திட்டமிடப்பட்ட மேம்படுத்தல், “அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தயாராகும் முதல்படி,” என்று வருணித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ​​அதிபர் யூன், பிரதமர் வோங் ஆகியோர் விநியோகச் சங்கிலி, உணவுப் பாதுகாப்பு, திரவநிலை இயற்கை எரிவாயு, சிறிய நடுத்தர நிறுவனங்கள், புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதைப் பார்வையிட்டனர்.

குறிப்புச் சொற்கள்