சிங்கப்பூர்-தென்கொரியா இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைக்க இணக்கம் கண்டுள்ளன.
வர்த்தகம், நீடித்த நிலைத்தன்மை, தற்காப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு உறவு மேலும் வலுவடைகிறது.
நவம்பர் 1ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் சோலில் உள்ள அதிபர் மாளிகையில் இரு நாடுகளுக்கு இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவ உறவை கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
அந்த உத்திபூர்வ பங்காளித்துவம் எட்டு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அதில் பசுமை மற்றும் மின்னிலக்கக் கப்பல் பாதையை நிறுவுவதற்கான ஓர் ஒப்பந்தமும் அடங்கும். அதன்வழி இரு நாடுகளும் கடல்துறையில் பசுமை எரிபொருளுக்கு மாறுவதை ஆதரிக்கும். மின்னிலக்கமயமாக்கலை விரைவுபடுத்துவது மற்றோர் ஒப்பந்தமாகும்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் வோங், சிங்கப்பூரும் தென்கொரியாவும் தகுந்த நேரத்தில் இருதரப்பு உறவு மேலும் மேம்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் 50 ஆண்டுகால அரசதந்திர உறவைக் கொண்டாடுகின்றன.
1975ல் இருதரப்பு உறவு ஏற்படுத்தப்பட்டது. அப்போது உலகப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருந்தது. ஆனால், தென்கொரியாவும் சிங்கப்பூரும் தொடர்ந்து முன்னேறி ஆசியப் புலிகள் எனப் பெயர் பெற்றதை பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் எங்களுடைய பொருளியலை மாற்றியமைத்தோம். ஒவ்வொரு நாடும் சொந்தப் பாதைகளை உருவாக்கிக் கொண்டன. ஆனால், இருதரப்பு நன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டன. இன்று இரு நாடுகளுக்கு இடையிலான பங்காளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அம்மோனியா, ஹைட்ரஜன், அணுசக்தித் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய எரிசக்தி தீர்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதும் இருதரப்பு உத்திபூர்வ பங்காளித்துவத்தின் ஒரு முக்கிய ஒப்பந்தமாகும்.
பிரதமர் வோங் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் இருதரப்பு ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.
இரு நாடுகளும் பொதுத் துறையில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் இணங்கியுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அருமையான உறவை மறுவுறுதிப்படுத்தி இருப்பதாக அதிபர் லீ ஜே மியுங் குறிப்பிட்டார்.
தென்கொரியாவிலும் அதன் வர்த்தகங்களிலும் சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் என்ற முறையில் திரு வோங் தென்கொரியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது. ஏபெக் கூட்டத்தையடுத்து இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
இதற்கிடையே, பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் பேராளர்கள் குழுவுக்குத் தலைமையேற்று நவம்பர் 3 முதல் 4 வரை புருணைக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் 11வது சிங்கப்பூர்-புருணை இளம் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார்.

