சிங்கப்பூரும் தான்சானியாவும் இணைந்து புதிய வேலைகளை உருவாக்கலாம்: அதிபர் தர்மன்

சிங்கப்பூரும் தான்சானியாவும் இணைந்து புதிய வேலைகளை உருவாக்கலாம்: அதிபர் தர்மன்

2 mins read
இரு நாடுகளும் தங்கள் தனித்துவமான பலங்கள் மூலம் வளர்ச்சிக்கு வித்திடலாம் என்றார்
b9f6839a-276d-4b4d-9bc4-292b181eed4a
அதிபர் தர்மன் சண்முகரத்னம், தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற சிங்கப்பூர்-தான்சானியா கூட்டு வர்த்தகக் கருத்தரங்கில் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் தான்சானியாவும் இணைந்து தங்களின் தனித்துவமான பலத்தைப் பயன்படுத்தி, நல்ல வேலைவாய்ப்புகளையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உருவாக்க முடியும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், செவ்வாய்க்கிழமை (ஜூன் 9), வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றினார். சிங்கப்பூர்-தான்சானியா கூட்டு வர்த்தகக் கருத்தரங்கு, தான்சானியாவின் ஜூலியஸ் நைரேரே அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே வேளாண்-வணிகம் முதல் சுற்றுப்பயணத் துறை வரை அர்த்தமுள்ள பங்காளித்துவத்திற்கான உண்மையான வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் தர்மன் தமது உரையில் குறிப்பிட்டார்.

தான்சானியாவை ‘நம்பிக்கையளிக்கும் வாய்ப்புகள் நிறைந்த நாடு’ என்று குறிப்பிட்ட அவர், அதன் மக்கள்தொகையில் இளையர் எண்ணிக்கை, அதிக அளவிலான அதன் இயற்கை வளங்கள், வட்டார, உலகச் சந்தைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ள அதன் நிலவியல் இருப்பிடம் ஆகியவற்றைச் சுட்டினார்.

மேலும், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அதன் முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைந்து வருவதாகவும் திரு தர்மன் கூறினார்.

இருதரப்புப் பங்காளித்துவம் வாயிலாகச் தான்சானியாவின் வலுவான சிறப்புகளைச் சிங்கப்பூரின் விநியோகத் தொடர் மேலாண்மை, மின்னிலக்கப் பொருளியல் ஆகியவற்றோடு இணைக்க முடியும் என்றார் அவர்.

அத்துடன், உலக வர்த்தக விதிமுறைகள் நிச்சயமற்றதாகி வரும் சூழலில், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாடுகள் பன்மயமாதலை எட்டுவது அவசியம் என்றும் அதிபர் கூறினார். கிழக்கு ஆப்பிரிக்கக் கூட்டமைப்புடன் (EAC) சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹாசன், தமது உரையில் பொருளியல் உருமாற்றம், துறைமுக மேம்பாடு, தொழில்நுட்பம், முதலீட்டு நிர்வாகம் போன்றவற்றில் சிங்கப்பூரின் சாதனைகளைச் சுட்டினார்.
தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹாசன், தமது உரையில் பொருளியல் உருமாற்றம், துறைமுக மேம்பாடு, தொழில்நுட்பம், முதலீட்டு நிர்வாகம் போன்றவற்றில் சிங்கப்பூரின் சாதனைகளைச் சுட்டினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கருத்தரங்கில் உரையாற்றிய தான்சானிய அதிபர் சமியா சுலுஹு ஹாசன், சிங்கப்பூரின் பொருளியல் உருமாற்றம் மற்றும் துறைமுக மேம்பாட்டைத் தான்சானியா முன்மாதிரியாகக் கொள்ளும் என்றார்.

மேலும், காபி, தேயிலை போன்ற வேளாண் விளைபொருள்களைச் சிங்கப்பூருக்கு விநியோகம் செய்ய இருதரப்பு உடன்பாட்டை அவர் பரிந்துரைத்தார். 2025ல் இருதரப்பு வர்த்தகம் $227.7 மில்லியனை எட்டியது.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கருத்தரங்கில் 15 சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்அதிபர் தர்மன்புதிய வேலைகள்வளர்ச்சி