சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்காப்பு உறவு மறுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹேக்செத்துடன் பேசியதாகவும் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்து கூறியதாகவும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் பிரபலமும் விருதுகள் பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியுமான திரு ஹேக்செத் ஜனவரி 24ஆம் தேதியன்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க ராணுவம் உலகெங்கும் செயல்பட்டு வருகிறது, செல்வாக்குமிக்கது என்று குறிப்பிட்ட டாக்டர் இங், திரு ஹேக்செத் மிகப் பெரிய பொறுப்பைச் சுமப்பதாகக் கூறினார்.
“நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சிங்கப்பூரின் வலுவான பங்காளித்துவத்துக்கு அமைச்சர் ஹேக்செத் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் பாய லேபார் ஆகாயப் படை முகாம், ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா-சாங்கி கடற்படை முகாம் ஆகியவற்றை அமெரிக்க ஆயுதப் படைக்குச் சொந்தமான விமானங்கள், கப்பல் ஆகியவை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதிக்கிறது. இதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்,” என்றார் டாக்டர் இங்.
சிங்கப்பூர் ஆயுதப் படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கியதற்கு திரு ஹேக்செத்திடம் டாக்டர் இங் நன்றி தெரிவித்தார்.
“இருநாடுகளுக்கு இடையிலான வலுவான தற்காப்பு உறவை மறுஉறுதி செய்ததுடன், பரஸ்பர அனுகூலங்களுக்கும் வட்டார நிலைத்தன்மைக்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி பூண்டோம்” என்றார் டாக்டர் இங்.
மே 30லிருந்து ஜூன் 1 வரை நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வருமாறு திரு ஹேக்செத்துக்கு அழைப்பு விடுத்ததாக டாக்டர் இங் தெரிவித்தார்.

