தற்காப்பு உறவை வலுப்படுத்தும் சிங்கப்பூர், அமெரிக்கா

2 mins read
8a962184-e3ef-476e-9333-d71dc4dac8dc
சிங்கப்பூரும் அமெரிக்காவும் இருதரப்புக்கும் இடையிலான உன்னத, நீண்டகால தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்துகின்றன. - படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினும் இரு நாடுகளுக்கு இடையிலான உன்னதமான தற்காப்பு உறவையும் இருதரப்புக்கும் பயனுள்ள பங்காளித்துவத்தையும் மறுவுறுதிப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் இருவரும் ஜூலை 16ஆம் தேதி அமெரிக்கத் தற்காப்பு அமைச்சில் சந்தித்தனர்.

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய, உருவெடுத்துவரும் தொழில்நுட்ப அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

தரவுகள், பகுப்பாய்வுகள், செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு குறித்த புதிய உடன்படிக்கை கையெழுத்தானதையும் அவர்கள் வரவேற்றதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இரு நாடுகளும் திறனாளர் நிர்வாகம் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான சில முக்கிய அம்சங்களை அடையாளம் கண்டுள்ளன.

“இன்றைய மின்னிலக்கப் போர்க்களத்தில் ராணுவங்கள் ஒருபடி மேலே இருப்பதற்கு உதவ, செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமாகி வருகிறது,” என்று டாக்டர் இங் கூறினார்.

“ராணுவச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை விரைவுபடுத்த சிங்கப்பூரும் அமெரிக்காவும் அணுக்கமாக இணைந்து செயல்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.

“ஆசிய பசிபிக் வட்டாரத்தில் முக்கியத் தொழில்நுட்பப் புத்தாக்க நாடாகத் திகழும் சிங்கப்பூர் தொடர்ந்து நமது மிக மதிப்புக்குரிய தற்காப்புப் பங்காளியாக உள்ளது. இந்த முக்கிய உறவை மேலும் வலுப்படுத்த நாம் ஆவலுடன் இருக்கிறோம்,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் தலைமை மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவு அதிகாரி டாக்டர் ராதா ஐயங்கர் ப்ளம்ப் கூறினார்.

புதிய உடன்படிக்கை தற்காப்புத் தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சுக்கும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும், முன்னைய உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போவதாகவும் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது.

குறிப்பாக, இரு நாடுகளும் புதிய, மேம்பட்ட, குறிப்பிட்ட அம்சங்களில் ஒத்துழைக்க 2015ஆம் ஆண்டு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன.

அதோடு, சிங்கப்பூரும் அமெரிக்காவும் 2024 ஷங்ரிலா கலந்துரையாடலில் மற்றோர் உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டன.

ராணுவச் செயலாக்கச் சவால்கள் உள்ளிட்டவற்றுக்குத் தீர்வுகாண, செயற்கை நுண்ணறிவையும் தனித்தியங்கும் முறைகளையும் பயன்படுத்தி, தற்காப்புப் புத்தாக்கத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்