சிங்கப்பூரும் வியட்னாமும் தங்களது அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான பரிமாற்றங்களையும் பயிற்சிகளையும் விரிவுபடுத்தவுள்ளதுடன், தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவுள்ளன.
சிங்கப்பூர்-வியட்னாம் முதலாம் உத்திபூர்வக் கலந்துரையாடலுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டன. இதன்படி, மூத்த வியட்னாமிய அதிகாரிகளுக்கான ஆய்வுப் பயணங்களுக்கான ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், தொழில்நுட்ப இணைப்பு உத்தி குறித்த கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.
பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங், வியட்னாமியப் பிரதிநிதி திரான் கம் தூவுடன் இணைந்து இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வலுவான இருதரப்பு உறவுகள், இரு தென்கிழக்காசிய நாடுகளும் எதிர்காலத்தை இணைந்து நோக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாக அமைச்சர் சான் தெரிவித்தார்.
தலைமுறை தலைமுறையாகத் தலைவர்கள் கட்டியெழுப்பிய பரஸ்பர நம்பிக்கையே இந்த நீண்டகால நட்புறவுக்குக் காரணம் என்றும் அடுத்த தலைமுறைத் தலைவர்களும் இந்த உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வலுவிழந்துவரும் விதிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறை, அதிகரித்துவரும் புவிசார் அரசியல் போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் தரமான, திறன்வாய்ந்த அரசாங்கம் வெற்றிகரமான நாட்டைப் பிற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்று திரு சான் கூறினார்.
வியட்னாமிய அதிபர் தோ லாம், மே மாதம் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ வருகையின்போது இந்த உத்திபூர்வக் கலந்துரையாடலுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. முன்னதாக, 2025ல் இருநாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆசியான் உறுப்பு நாடு ஒன்றோடு சிங்கப்பூர் இத்தகைய உடன்பாட்டைச் செய்துகொள்வது இதுவே முதன்முறை.
தொழில்நுட்பப் பிரிவில் செயற்கை நுண்ணறிவின் நன்மைகளைப் பயன்படுத்தவும் எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மூத்த அரசு அதிகாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டை விரிவுபடுத்தவும் இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.
“சிங்கப்பூரும் வியட்னாமும் பல பொதுவான நலன்களையும் சவால்களையும் பகிர்ந்துகொள்கின்றன. இந்த முதல் கலந்துரையாடல், இரு நாடுகளுக்கும் இடையிலான மேலும் தொடர்ச்சியான, அர்த்தமுள்ள பரிமாற்றங்களின் தொடக்கமாக அமையும் என நான் நம்புகிறேன்,” எனத் திரு சான் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூர் தரப்பில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, கல்வி; நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தற்காப்புத் துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ ஆகியோர் இடம்பெற்றனர்.


