புகைமூட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரபோவோவின் முயற்சிகளை சிங்கப்பூர் வரவேற்கிறது

புகைமூட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரபோவோவின் முயற்சிகளை சிங்கப்பூர் வரவேற்கிறது

படம்: ராய்ட்டர்ஸ்

19 Oct 2026 - 7:37 pm

2 mins read

புகைமூட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் அவரது நிர்வாகமும் எடுத்துள்ள முயற்சிகளை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது. தீயை அணைக்க வெளிநாட்டு உதவியைப் பெற அவர் இணக்கம் தெரிவித்ததும் அம்முயற்சிகளில் அடங்கும்.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் திங்கட்கிழமை (அக்டோபர் 19) செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமைச்சர் கா.சண்முகம், சதுப்பு நிலங்களில் ‘மரங்களை வெட்டி எரிக்கும்’ நடைமுறைகளைத் தடை செய்வதற்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது உட்பட, புகைமூட்டத்தைக் கையாள்வதில் திரு பிரபோவோ தனிப்பட்ட முறையில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.

மேலும், நீண்டகாலத் தீர்வாகத் தீ தடுப்புக்கு முன்னுரிமை அளிக்க இந்தோனீசிய அதிபர் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம், இந்தோனீசியாவின் தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பின் தலைவராக இருந்த சுஹர்யாந்தோவை, திரு பிரபோவோ நீக்கியுள்ளதைச் சுட்டினார். தீயணைப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கும் அந்த அமைப்பின் புதிய தலைவராக, இந்தோனீசிய ராணுவத்தின் லெஃப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டோமி சியான்டுரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவசரகால நிவாரண நிதியைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுஹர்யாந்தோவின் தம்பி கைது செய்யப்பட்ட மறுநாளான அக்டோபர் 15ஆம் தேதி, சுஹர்யாந்தோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

“இவற்றில் சில நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாதவை. இவை திரு பிரபோவோவின் நிர்வாகத்தின் அணுகுமுறையையும் சிந்தனையையும் காட்டுகின்றன. காட்டுத்தீயை எதிர்கொள்ள வெளிநாட்டு உதவியைப் பெறுவதற்கு பிரபோவோ ஒப்புதல் அளித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

“இந்தோனீசியாவுக்கு உதவ சிங்கப்பூர் முன்வந்துள்ளது. இந்தச் சூழலில் ஆதரவளிக்க எங்களால் இயன்ற பங்களிப்பை நாங்கள் செய்வோம்,” என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூரையும் மலேசியாவையும் சூழ்ந்துள்ள புகைமூட்டத்திற்குக் காரணமான தீயை அணைப்பதில் இந்தோனீசியாவிற்கு உதவ இரு நாடுகளும் முன்வந்துள்ளன.

சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டச் சூழல் மோசமடைந்து வருவதால், சிங்கப்பூர் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பது இயல்பானதே என்று கூறிய திரு சண்முகம், இது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“இந்தச் சூழலில், சிங்கப்பூருக்கான உயிர்வாயு தங்கள் காடுகளிலிருந்தே கிடைப்பதாக இந்தோனீசிய அதிகாரி ஒருவர் அண்மையில் கூறியது ஏமாற்றமளிக்கிறது.

“இந்தோனீசியாவில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் தவறான நடத்தையால் ஒட்டுமொத்த வட்டாரமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு கூறுவது முறையல்ல. சொல்லப்போனால், இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் இந்தோனீசிய மக்களே,” என்று திரு சண்முகம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பிரபோவோ சுபியாந்தோபேரிடர்மூத்த அமைச்சர்