ஆஸ்திரியத் தலைநகர் வியேன்னாவில் நடைபெற்ற அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பொது மாநாட்டில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் பேசிய சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாட்டின் நீண்டகாலப் பருவநிலை மற்றும் ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், சிங்கப்பூர் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து திறந்த மனதுடன் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
சிறிய, அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் மாற்று ஆற்றல் வளங்கள் குறைந்த ஒரு நாடாகச் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சூழ்நிலைகளையும் வரம்புகளையும் நன்கு உணர்ந்துள்ள அதே வேளையில், சிறு ரக அணு உலைகள் உள்ளிட்ட அதிநவீன அணுசக்தித் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கான திறன்களை நாடு வளர்த்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அணுசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொருளியல் சாத்தியம், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அனைத்துலகக் கடப்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையில், நாட்டின் அணுகுமுறை மிகவும் நிதானமாகவும் கட்டமைக்கப்பட்டதாகவும் துல்லியமாகவும் இருக்கும் என்று திருவாட்டி ஃபூ வலியுறுத்தினார்.
அணு உலைத் தொழில்நுட்பங்களை நடுநிலையுடன் மதிப்பிடுவதற்குத் தேவையான அறிவியல், தொழில்நுட்ப, நிறுவன மற்றும் ஒழுங்குமுறைத் திறன்களைச் சிங்கப்பூர் பெற்றிருக்க வேண்டும். இதற்காக, அரசாங்கம், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் முழுவதும் இந்தத் திறன்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் 2027ஆம் ஆண்டில் அனைத்துலக அணுசக்தி அமைப்புடன் இணைந்து, ‘ஒருங்கிணைந்த அணுசக்தி உள்கட்டமைப்பு மறுஆய்வு’ திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையைத் தொடங்கும். இந்த மறுஆய்வு, நாட்டின் திறன்களை அனைத்துலக மைல்கற்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்த முடிவை எடுக்க சிங்கப்பூரின் ஆயத்த நிலையை மதிப்பிடவும் உதவும்.
“ஒருங்கிணைந்த அணுசக்தி உள்கட்டமைப்பு மறுஆய்வு நடவடிக்கை என்பது அணுசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான ஓர் உறுதிப்பாடு அல்ல. மாறாக, சரியான முடிவை எடுப்பதற்கான நிபுணத்துவமும் கட்டமைப்புகளும் சிங்கப்பூரிடம் உள்ளதா என்பதை தீர்மானிக்க உதவும் ஒரு வழியே ஆகும்,” என்று வர்த்தக உறவுகளுக்கான பொறுப்பு அமைச்சருமான திருவாட்டி ஃபூ விளக்கமளித்தார்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் அணுசக்தி பயன்பாட்டில் ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில், வட்டார ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், அவசரகால ஆயத்தநிலை, கதிர்வீச்சு கண்காணிப்புக் கட்டமைப்புகள் மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றை வலுப்படுத்த ஆசியான் உறுப்பு நாடுகளுடனும் அனைத்துலக அணுசக்தி அமைப்புடனும் சிங்கப்பூர் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.
