மின்னிலக்க வர்த்தகம், புத்தாக்கம், விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய 29 ஒப்பந்தங்களைச் சிங்கப்பூரும் சீனாவும் திங்கட்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளன. அதேவேளையில், சீனாவின் ஹைனான் மாநிலத்திலிருந்து கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, முட்டைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்குச் சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், உறைந்த, குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி மற்றும் ஓட்டுடன் கூடிய முட்டைகளைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் பெற்ற சீனாவின் முதல் மாநிலமாக ஹைனான் உருவெடுத்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
“இது சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் கூடுதல் தெரிவுகளையும், ஹைனான் உற்பத்தியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் வழங்குகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
