தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளில்லா வானூர்திகள், எதிர்நடவடிக்கைகளில் சிங்கப்பூர் ஆயுதப்படை கூடுதல் முதலீடு

2 mins read
fba71056-4229-473d-8a70-256568e5e1dc
நவீனப் போர்த்திறத்தில் டிரோன்கள் ஆற்றும் பங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. - படம்: தற்காப்பு அமைச்சு

வெளிநாடுகளில் அண்மைய காலமாக ஏற்பட்டுவரும் மோதல்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட நிலையில் ஆளில்லாத் திறனில் சிங்கப்பூர் ஆயுதப்படை கூடுதல் முதலீடு செய்யவுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பிப்ரவரி 3ஆம் தேதி (திங்கட்கிழமை) தெரிவித்தார்.

இதன்படி ஆகாயப்படையிலும் ராணுவத்திலும் ஆளில்லா திறனுடைய வாகனங்களை உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைப்பதற்காக இரண்டு புதிய நிலையங்கள் அமைக்கப்படும். அத்துடன், ஆளில்லா வானூர்திக்கு எதிரான சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஆற்றலை அதிகப்படுத்தப் புதிய குழு ஒன்றும் சிங்கப்பூரின் மைய மின்னிலக்க உள்கட்டமைப்பைத் தற்காக்க புதிய தளபத்தியங்களும் அமைக்கப்படும்.

தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய டாக்டர் இங், நவீனப் போர்த்திறத்தில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா வானூர்தி ஆற்றும் பங்கு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். உதாரணத்திற்கு, கியவ் பொருளியல் பள்ளி நடத்திய ஆய்வில் ஆண்டுக்கு நான்கு மில்லியன் டிரோன்களை உருவாக்கும் ஆற்றல் உக்ரேனுக்கு உள்ளதாகக் கண்டறியப்பட்டது. ரஷ்யாவுடனான அதன் போருக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டால் இது 100 மடங்கு அதிகரிப்பாகும்.

உணரிகள், ‘ஜேமர் எனப்படும் குறுக்கீட்டு அழிப்பிகள், ஆயுதத் தீர்வுகள் போன்றவை உட்பட ஆளில்லா வான்வழி முறை தொடர்பான சிங்கப்பூர் ஆயுதப்படையின் எதிர்நடவடிக்கைத் திறனை வலுப்படுத்த நிலையம் ஒன்று அமைக்கப்படும். ஆளில்லா வான்வழி முறை மிரட்டல்களுக்கு எதிராக சிங்கப்பூரைத் தற்காக்க நிலையம் மற்ற அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும்.

ஆகாயப்படையில் ஆளில்லா வான்வழி முறைக்கான போர்த்திறம் மற்றும் திறன் உத்தி நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ராணுவத்திலும் இதேபோன்ற ஓர் அலுவலகம் அமைக்கப்படும். அதன் பிரிவுகளின் ஆளில்லா தளங்களுடைய செயல்பாடுகள் விரிவுபடுத்தப்படும்.

மின்னிலக்க உலகில் எதிர்கால மிரட்டல்களை எதிர்கொள்ளும் முயற்சியாக 2022ஆம் ஆண்டில் ‘டிஐஎஸ்’ எனப்படும் மின்னிலக்க, உளவுத்துறைச் சேவை துவங்கப்பட்டது. மின்னிலக்கமயத்தை வளர்க்கவும் அச்சுறுத்தும் மின்னிலக்க மிரட்டல்களைத் துணிந்து எதிர்கொள்ளவும் இரண்டு தளபத்தியங்கள் புதிதாகச் சேர்க்கப்படும்.

“ராணுவம் புதிய தொழில்நுட்பத்தைத் தங்களின் படையின் கட்டமைப்பிலும் செயல்பாடுகளிலும் ஒருங்கிணைப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் இந்த மிரட்டல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் வேண்டும்,” என்று டாக்டர் இங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்