சிங்கப்பூரும் ஜெர்மனியும் இணைந்து வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் இரண்டு ராணுவப் பயிற்சிகளுக்கு திட்டமிட்டுள்ளன.
அதன் முதல் நேரடிப் பயிற்சி, இம்மாதம் (மார்ச்) 8ம் தேதி தொடங்கி, 12ம் தேதிவரை ஐந்து நாள்களுக்கு ஜெர்மனியின் ‘ஒபர்லவ்சிட்ஸ்’ ராணுவப் பயிற்சித் தளத்தில் நடைபெற்றது என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு மார்ச் 14 அன்று அறிவித்தது.
நேரடியாகப் பயன்படுத்தப்படும் குண்டுகளையும் எறிபடைகளையும் உள்ளடக்கிய இப்பயிற்சிகளில் ‘லெப்பர்ட் 2எஸ்ஜி’ ரக கவச வாகனங்களும் ‘ஹன்டர்’ வகை தாக்குதல் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. பயிற்சிகளின்வழி, வீரர்கள் போர் வாகனங்களை எவ்வாறு ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை சோதித்து மெருகேற்றிக்கொள்ளமுடியும்.
கடந்த 2009 தொடங்கி, ஆண்டுதோரும் ஏற்பாடு செய்யப்படும் இப்பயிற்சிகளில், இது 16வது பயிற்சியாகும். ‘பன்டஸ்வெயர்’ (Bundeswehr) என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகின்ற ஜெர்மானிய ராணுவப் படையுடன் உள்ள தற்காப்பு நல்லுறவை வலுப்படுத்த இவ்வகைப் பயிற்சிகள் முக்கியமானவை என்று தற்காப்பு அமைச்சு கூறியது.
உயர்மட்ட சந்திப்புகள், தொழில்நுட்பக் கூட்டு முயற்சிகள் போன்றவற்றை ஜெர்மனியும் சிங்கப்பூரும் வழக்கமாக மேற்கொள்கின்றன எனவும் அமைச்சு தெரிவித்தது.