நியூ அப்பர் சாங்கி ரோடு நோக்கிச் செல்லும் அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் சிங்கப்பூர் ஆயுதப் படை வாகனமும் வேனும் மோதிக்கொண்டன.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) அவ்விபத்து நடந்தது. அதில் சிக்கிய 24 வயது சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அவ்விபத்து குறித்து தங்களுக்கு அன்று காலை 7.00 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
விபத்து நடந்த பிறகு எடுக்கப்பட்ட காணொளி ஒன்று எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
அதில் ஐந்து டன் எடை கொண்ட சிங்கப்பூர் ஆயுதப் படை வாகனம் ஒன்று சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருப்பதையும் மருத்துவ அவசர உதவி வாகனம் ஒன்று அவ்விடத்தில் இருப்பதையும் காண முடிந்தது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஆயுதப் படை அறிந்திருப்பதாகவும் விசாரணைக்கு உதவி வருவதாகவும் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு ஜூன் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அதிகாரி சுயநினைவுடன் இருந்ததாகவும் புறநோயாளிப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுகொண்டதாகவும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் தற்காப்பு அமைச்சும் கூறின.