குவான்டம் கணினி முறையைப் பயன்படுத்த சிங்கப்பூர் ராணுவம் பரிசீலனை

குவான்டம் கணினி முறையைப் பயன்படுத்த சிங்கப்பூர் ராணுவம் பரிசீலனை

2 mins read
பணி, தளவாடத் திட்டமிடலுக்காக இந்த முறை கையாளப்படும்
463e259e-d37c-4a42-a29a-5a24dcd7ff37
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ (இடது), சாங்கி பொது மருத்துவமனையுடன் இணைந்து ஐபிஎம் உருவாக்கிய ஆழ்நிலை கலப்பு மெய்நிகர் பயிற்சித் தீர்வைச் சோதித்துப் பார்க்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணி மற்றும் பயிற்சித் திட்டமிடலை மேம்படுத்துவதற்கு குவான்டம் கணினிகளைப் பயன்படுத்த முடியுமா என்பதைச் சிங்கப்பூர் ராணுவம் ஆராய்ந்து வருகிறது. இதில், எதிரிப் படைகளைக் கண்டறிந்து தாக்குவதற்கு ஆளில்லா வானூர்திகளும் (ட்ரோன்) பயன்படுத்தப்படலாம்.

செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 21), தொழில்நுட்ப பெருநிறுவனமான ஐபிஎம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் மின்னிலக்க, உளவுத்துறைப் படை (டிஐஎஸ்), தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (டிஎஸ்டிஏ) ஆகியவை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு கூட்டணியை அறிவித்தன.

இதன் மற்ற சாத்தியமான பயன்பாடுகளில், மறுவிநியோகப் பணிகளை மிகக் குறைந்த நேரத்தில் நிறைவு செய்வதற்காக, விநியோக லாரிகள், எரிபொருள் தொட்டிகளைக் கொண்ட லாரிகள் செல்லும் பாதையைத் திறமையாக அமைப்பதும் அடங்கும்.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, டிஐஎஸ், டிஎஸ்டிஏ ஆகியவை குவான்டம் கணினித் துறையில் நிபுணத்துவத்தை உருவாக்குவதுடன், ஐபிஎம்-இன் குவான்டம் கணினி வளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறும்.

குவான்டம் கணினிகள் பாரம்பரிய கணினிகளைவிட மிகவும் மேம்பட்டவை என்று கூறப்படுகிறது. ஏனெனில், குவான்டம் கணினிகளால் எண்ணற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, சில மணி நேரங்களிலேயே ஒரு சாத்தியமான தீர்வைக் கண்டறிய முடியும். ஆனால், ஒரு பாரம்பரிய கணினி அதே பணியைச் செய்ய நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.

“தற்காப்புத் துறைக்குள், குவான்டம் கணினி, நெறிமுறைகள், நிரலாக்கக் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்ட பொறியாளர்களும் உருவாக்குநர்களும் அடங்கிய ஒரு குழு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்,” என்று சிங்கப்பூர் ஆயுதப்படை சி4 மற்றும் மின்னிலக்கமயமாக்கல் தளபத்தியத்தின் தலைவர் திரு குவோ ஜிங்ஹுவா கூறினார்.

தளவாடப் போக்குவரத்து ஒரு முக்கியமான தற்காப்புப் பிரச்சினை என்பதைக் குறிப்பிட்ட அவர், 50 இடங்களில் 20 லாரிகளைப் பயன்படுத்தி மட்டும் பொருள்களை விநியோகிப்பது, ஓர் எண்ணிலடங்கா சாத்தியமான வழித்தடக் கலவைகளை உருவாக்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“ஒரு கப்பலிலிருந்து நீங்கள் இறக்கும் கொள்கலன், இரண்டாம் அடுக்கில் அடுக்கப்பட்டுள்ளதா அல்லது எட்டாம் அடுக்கில் அடுக்கப்பட்டுள்ளதா என்பதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது,” என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21), ஐபிஎம் நடத்திய ஒரு கலந்துரையாடலின்போது, ​​தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.

“திறமையாக அடுக்கப்பட்டால், கொள்கலனை அடுத்த கப்பலில் மீண்டும் ஏற்றுவதற்கான வேலை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இவை மிகவும் சிக்கலான கணக்கீடுகள்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
குவாண்டம்ஜோசஃபின் டியோராணுவம்ஆளில்லா வானூர்தி