மூப்படைந்துவரும் மக்கள்தொகை, மாறிவரும் பணிச்சூழல், மின்னிலக்கமயமாக்கல் ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், 2026-2027ஆம் ஆண்டுக்கான ஆசியான் சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை புருணையிடமிருந்து சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நவம்பர் 17 முதல் 19 வரை நடைபெறும் 43வது ஆசியான் சமூகப் பாதுகாப்புச் சங்க மாநாட்டில் இப்பொறுப்பு மாற்றம் இடம்பெற்றது.
இந்த மூன்று நாள் மாநாட்டில் ஆசியானின் 21 சமூகப் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த ஏறத்தாழ 90 பேராளர்களும் வட்டார, அனைத்துலக வல்லுநர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவளத் தற்காலிக அமைச்சரும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சருமான ஜாஸ்மின் லாவ், ஆசியான் நாடுகள் மக்கள்தொகை மாற்றத்தின் வெவ்வேறு கட்டங்களில் இருப்பதாகக் கூறினார்.
வரும் 2050க்குள் ஆசியானில் ஆறு பேரில் ஒருவர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பார் என மதிப்பிடப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
“நீண்ட ஆயுள் என்பது கொண்டாட வேண்டிய ஒன்று. ஆனால், வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பல ஆண்டுகள் பராமரிப்பு தேவைப்படுமா என்பது நமக்குத் தெரியாது. இத்தகைய நிச்சயமற்ற சூழலை நம்மால் தனியாக எதிர்கொள்ள முடியாது. அதனால்தான் இடர்பாடுகளைப் பகிர்ந்துகொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
வாழ்நாள் நீடிப்பதால் ஏற்படும் நிச்சயமற்ற நிலையைச் சமாளிக்க, சிங்கப்பூரின் ‘மசேநிதி லைஃப்’ திட்டம் உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுதும் மாதாந்தரத் தொகையை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பணவீக்கம், உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம், நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றுக்கேற்ப இந்தத் தொகை அமைவதை உறுதிசெய்ய, 2023 முதல் 2027 வரை ஓய்வுக்காலத் தொகைகளை அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3.5 விழுக்காடு விகிதத்தில் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
வரும் 2028ஆம் ஆண்டுக்கும், அதற்குப் பிந்தைய காலத்திற்கான ஓய்வுக்கால முழுத்தொகை குறித்த புள்ளிவிவரங்களை அரசாங்கம் தற்போது மறுஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின்போது, இணையவழி ஊழியர்களுக்கான ஓய்வூதியம், வீடமைப்புத் தேவைகளை வலுப்படுத்துவதில் பெற்ற அனுபவங்களையும் பாடங்களையும் சிங்கப்பூர் பகிர்ந்துகொள்ளும்.
மேலும், மின்னிலக்கமயமாதல் குறித்தும் விளக்கினார் திருவாட்டி லாவ்.
ஆசியான் நாடுகள் மும்முனைச் சவால்களை எதிர்கொள்ளும்போது, ஒன்றிலிருந்து ஒன்று கற்றுக்கொள்வதில் உள்ள முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
