அதிபரின் தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள்

அதிபரின் தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள்

2 mins read
312acde8-e04f-4fd5-8a0b-4e9a54fa3437
இஸ்தானாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெற்ற சிங்கப்பூரின் 61வது தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் (இடமிருந்து) திருவாட்டி லீ, மூத்த அமைச்சர் லீ சியன் லூங், திருவாட்டி தர்மன், அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், திருவாட்டி வோங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், திருவாட்டி கோ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வருடாந்திர தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) இரவு இஸ்தானாவில் நடந்தேறியது.

இந்த ஆண்டிற்கான தேசிய தின வரவேற்பு விருந்தினர்களில் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள், சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள், சுகாதாரப் பராமரிப்புத் துறைப் பங்காளிகள் ஆகியோருடன் சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஏறத்தாழ 750 பேர் பங்கேற்ற அந்நிகழ்ச்சியை அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோர் அவர்தம் துணவியருடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.

காலாங் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் 42,000 பேருக்கு இடையே தேசிய தினப் பாடலை பாடிய உள்ளூர்க் கலைஞர் இமான் ஃபாண்டி இந்நிகழ்ச்சியிலும் பங்கேற்று ‘ஜயண்ட்ஸ்’ என்ற தேசிய தினப் பாடலைப் பாடினார்.

‘த ஸ்ட்ரெய்ட்ஸ் ஆன்சாம்பல்’ என்ற கலைக்குழு, இரவு முழுவதும் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு தேசிய தினப் பாடல்களைப் புதிய பாணியில் இசைத்து அசத்தியது.

தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தவர்களில் மூத்த அடித்தளத் தலைவர் அப்துல் அஜீஸ் அபு தாலிப்பும் ஒருவர்.

கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகச் சமூகச் சேவையாற்றிவரும் அவர், தமது பணிக்காலத்தில் அமைச்சர்கள் பலருடனும் அரசியல்வாதிகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இருப்பினும், இஸ்தானாவில் நடைபெற்ற வருடாந்தர தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது இதுவே முதன்முறை.

அச்சக உரிமையாளரும் பதிப்பாளருமான அவருக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.

ஏனெனில், இந்த விழா அவரது 77வது பிறந்தநாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்றது.

“புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதையும் அவர்களின் பண்புகளை அறிந்துகொள்வதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று அப்துல் அஜீஸ் கூறினார்.

இவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, தற்போதைய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி உட்பட அமைச்சர்கள் பலருடன் பணிபுரிந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தேசிய தினம்அதிபர் தர்மன்விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்