சிங்கப்பூரின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் வெப்ப நோய்கள் குறித்த தரவுகளை மேம்படுத்த ஆய்வாளர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
தீவின் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எளிதன்று. ஆனால், வெப்பம் சார்ந்த நோய்களின் அறிகுறிகள் மற்ற நோய்களைப் போலவே இருப்பதால், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இவை பெரும்பாலும் தவறாகக் கண்டறியப்படச் சாத்தியம் உள்ளது.
எடுத்துக்காட்டாக, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் அல்லது மனக்குழப்பம் கொண்ட நோயாளி ஒருவருக்கு, வெப்பம் சார்ந்த நோயைக் காட்டிலும் கிருமித்தொற்று, ரத்தத்தில் நச்சு கலப்பது முதலிய பாதிப்புகள் இருப்பதாகத் தொடக்கத்தில் சந்தேகிக்கப்படலாம்.
இது வெப்ப நோய்கள் குறித்த பதிவுகள் குறைவதற்கும் மக்கள்தொகையில் வெப்ப நோய்களின் உண்மையான தாக்கத்தையும் அது மற்ற நோய்களை எவ்வாறு தூண்டுகிறது என்பதையும் பற்றிய தவறான தகவலை அளிப்பதற்கும் வழிவகுக்கக்கூடும்.
சிங்கப்பூர் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில், உயர்ந்துவரும் வெப்பநிலை இங்குத் தீவிர வெப்ப நோய்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதா என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு மூத்த ஆலோசகர் ஒருவர், 10 பொது மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
“சிங்கப்பூர் முழுதும் வெப்பம் சார்ந்த நோய்களைக் கண்டறிதல், வகைப்படுத்துதல், பதிவு செய்வதில் மிகவும் முறையான, சீரான வழியை உருவாக்குவதே இதன் நோக்கம்,” என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் அவசர மருத்துவ ஆய்வு நிலையத்தின் இயக்குநருமான பேராசிரியர் மார்க்கஸ் ஓங் எங் ஹோக் கூறினார்.
வெப்ப-வரைபட ஆய்வு 2028ஆம் ஆண்டு நிறைவுக்கு வரும். அதன்படி, அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவ ஊழியர்கள் முதலில் வெப்பம் சார்ந்த நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளைக் கண்டறிகின்றனர். மயக்கம், தசைப்பிடிப்பு, வலிப்பு, தலைவலி முதலியவை அதற்கான அறிகுறிகளில் அடங்கும்.
பின்னர் நோயாளியின் உடல்வெப்பநிலை போன்ற முக்கிய மருத்துவத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவர்கள் வெப்பமான சூழலில் கடினமாகப் பணியாற்றினார்களா என்பது போன்ற தகவல்களையும் மருத்துவ ஊழியர்கள் பதிவுசெய்கின்றனர்.
நோயாளிக்கு இதய நோய் உள்ளிட்ட வெப்பப் பாதிப்பை அதிகரிக்கக்கூடிய மற்ற பிரச்சினை ஏதேனும் உள்ளதா என்பதும் இந்த மருத்துவத் தரவுகளில் அடங்கும். அதிக வெப்பத்தால் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள மருத்துவ ஊழியர்கள் ஆய்வகப் பரிசோதனைகளையும் பரிந்துரைக்கலாம்.
“வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்துக் கேட்பது, அறிகுறிகள், சூழல்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது ஆகியவற்றின்மூலம் கவனிக்கப்படாமல் போகக்கூடிய பாதிப்புகளை நாம் மேலும் சிறந்த முறையில் கண்டறிய முடியும்,” என்று பேராசிரியர் ஓங் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பொது மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் வெப்பம் சார்ந்த நோய்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 280ஆக இருந்தது. ஒப்புநோக்க, 2025ல் அது 398க்குக் கூடியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
