சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் பொருளியல் மீள்திறன், அத்தியாவசியப் பொருள்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் தாங்கள் கையெழுத்திட்டதாக இரு நாடுகளும் திங்கட்கிழமை (ஜூலை 27) அறிவித்தன. சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பொருளியல் மீள்திறன், அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பில் சட்டபூர்வமாகச் செயல்படுத்தக்கூடிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆன பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியக் கூட்டு அமைச்சர்நிலைச் சந்திப்பு
பொருளியல் மீள்திறன், அத்தியாவசியப் பொருள்களுக்கான சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இது அடிலெய்ட் நகரில் நடைபெற்ற 15வது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியக் கூட்டு அமைச்சர்நிலைச் சந்திப்பில் கையெழுத்தானது. இருநாட்டுப் பிரதமர்களும் கடந்த ஏப்ரல் மாதம் கூட்டறிக்கை வெளியிட்டதையடுத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
“விநியோகச் சங்கிலி மீள்திறனுக்கு சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் கடப்பாடு கொண்டிருப்பதையும் அத்தியாவசியப் பொருள்கள் வர்த்தகத்தில் இரு நாடுகளும் ஒத்துப்போவதையும் இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது,” என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு திங்கட்கிழமை வர்த்தக, தொழில் அமைச்சு அறிக்கை மூலம் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் டான் சீ லெங், ஆஸ்திரேலிய வர்த்தக, சுற்றுலாத்துறை அமைச்சர் டோன் ஃபேரல் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா தடையற்ற வர்த்தக உடன்பாடு
இந்த ஒப்பந்தம், சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேர்க்கப்படும் என்று அமைச்சு சுட்டியது. இருதரப்பிலும் உள்ளூர் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அது குறிப்பிட்டது.
இடையூறுகள் ஏற்படும் காலத்திலும் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் கொண்டுள்ள கடப்பாட்டை இந்த ஒப்பந்தம் மறுவுறுதிப்படுத்துவதாக டாக்டர் டான் கூறினார். விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள பலதரப்பு வர்த்தக முறையை வலுப்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் டான் பேசினார்.
புதிய ஒப்பந்தத்தின்கீழ், ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்கள்மீது ஏற்றுமதித் தடைகளை விதிக்கவோ ஏற்கெனவே இருக்கும் அத்தகைய தடைகளைத் தொடரவோ போவதில்லை என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. டீசல், எல்என்ஜி இயற்கை எரிவாயு போன்ற பொட்ரோலிய எண்ணெய்ப் பொருள்கள் அவற்றில் அடங்கும்.

