சிங்கப்பூரில் (கேஎஃப்எஃப்) பேட்மிண்டன் பொது விருதுப் போட்டிகள் இம்மாதம் (மே) 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
அந்தத் தொடரில், உள்ளூர் நட்சத்திரம் லோ கியென் யூ, சீனத் தைப்பே (தைவான்) வீரர் சீ யூஜென்னை வெள்ளிக்கிழமை (மே 29) நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
2021ஆம் ஆண்டில் உலக பேட்மிண்டன் போட்டியில் வெற்றிவாகை சூடி வரலாறு படைத்த லோ அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கொக்கி வடனாபியை சனிக்கிழமை சந்திப்பார்.
சிங்கப்பூர் உள்ளரங்கில் நடந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 14ஆம் நிலையில் உள்ள லோ, 16-21, 21-6, 21-8 என்ற புள்ளி எண்ணிக்கையில் அதே தரவரிசையில் 18ஆம் நிலையில் இருக்கும் சீயை தோல்வி அடையச் செய்தார்.
சீன தைப்பே வீரரான சீயை இதுவரை லோ மூன்று முறை பேட்மிண்டன் போட்டிகளில் சந்தித்துள்ளார். அவற்றுள் இதுவே லோ பெற்ற முதல் வெற்றியாகும்.
இந்த பேட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் ஒரே உள்ளூர் வீரர் லோ. சிங்கப்பூரின் மற்றப் போட்டியாளர்கள் அவரவர் விளையாடிய அனைத்துப் பிரிவுகளிலும் தோல்வியைத் தழுவி வெளியேறிவிட்டனர்.

