முழுவதும் கம்பி வலை போடப்பட்ட லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச்செல்ல விரைவில் தடை

முழுவதும் கம்பி வலை போடப்பட்ட லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச்செல்ல விரைவில் தடை

2 mins read
538c070e-c81d-43c3-b82b-e8453d9bcf3a
முழுவதும் கம்பி வலைகள் போடப்பட்ட லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச்செல்ல 2027 ஜனவரி 1 முதல் தடைவிதிக்கப்படவுள்ளது. - படம்: போக்குவரத்து அமைச்சு

முழுவதும் கம்பி வலைகள் போடப்பட்ட லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்ல 2027 ஜனவரி 1 முதல் தடைவிதிக்கப்படும் என்று போக்குவரத்து, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, மக்கள் நலன் சார்ந்த போக்குவரத்து  அமைப்பாகத் திகழும் அமைச்சின் இலக்குகள் குறித்து உரையாற்றியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

தங்குமிடத்திற்கும் வேலையிடத்திற்கும் இடையிலான ஊழியர் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையினருடனும், அரசு சாரா அமைப்புகளுடனும் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட மூத்த துணை அமைச்சர், அதில் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாகவும் சொன்னார்.

ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் மேற்கூரை, உயரமான பக்கவாட்டுப் பாதுகாப்புத் தடுப்புகள் பொருத்துவது, குறைவான வேக வரம்பு, குறைந்தபட்ச இடவசதித் தேவைகளைப் பூர்த்தி செய்வது உள்ளிட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது அமைச்சு கண்டுள்ள முன்னேற்றங்களில் சில என்று திருவாட்டி சுன் கூறினார்.

‘‘எடுத்துக்காட்டாக, வெளியே பூட்டப்பட்ட அல்லது தாழிடப்பட்ட, முழுதும் கம்பி வலைகளால் ஆன கதவைக் கொண்ட லாரி விபத்துக்குள்ளானாலோ தீப்பற்றினாலோ, அதிலிருக்கும் ஊழியர்களால் தப்பிக்க முடியாமல் போகலாம்.

‘‘கம்பி வலைகள் போடப்பட்ட லாரிகளின் பின்பகுதியில் அமர்ந்து செல்வது அதில் பயணம் செய்வோர்க்குப் பாதுகாப்பு சார்ந்த கடும் அபாயங்களையும் ஏற்படுத்துகின்றது,’’ என்றார் திருவாட்டி சுன்.

என்றபோதும் இத்தகைய லாரிகளை நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றிச்செல்லப் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

நிறுவனங்கள் தங்கள் லாரிகளின் பின்தளத்தில் ஊழியர்களையோ சரக்குகளையோ ஏற்றிச்செல்ல நீக்குப்போக்கான வசதி தேவைப்பட்டால், கம்பி வலைகளுக்குப் பதிலாக, மேற்கூரை, பக்கவாட்டுத் தடுப்புகள், மழைநீர் புகாத தடுப்புகளைப் பொருத்திக் கொள்ளலாம் என்றும் திருவாட்டி சுன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்