ஏற்றத்தில் சிங்கப்பூர் வங்கிகளின் பங்குகள்

முதல் முறையாக 70 வெள்ளியைத் தாண்டி டிபிஎஸ் புதிய சாதனை

ஏற்றத்தில் சிங்கப்பூர் வங்கிகளின் பங்குகள்

2 mins read
fe8b9695-a283-458e-ae8d-4e6746870395
வங்கிகளின் வலுவான நிதி மேலாண்மை, கவர்ச்சிகரமான ஈவுத்தொகை ஆகியவை தொடர்ந்து பங்குகளின் விலையை ஏற்றமாகவே வைத்திருக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். - கோப்புப் படம்: பிஸினஸ் டைம்ஸ்

டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய சிங்கப்பூரின் மூன்று முன்னணி உள்ளூர் வங்கிகளின் பங்கு மதிப்புகள் இந்த வாரம் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளன.

உலகளாவிய வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு உயர்வாகவே நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிடப்படவுள்ள வங்கிகளின் இரண்டாம் காலாண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கைகள் குறித்த முதலீட்டாளர்களின் நேர்மறையான பார்வையும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வாரம் டிபிஎஸ் வங்கியின் பங்கு மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக $70 என்ற மைல்கல்லைக் கடந்து, வார இறுதியில் 5.7 விழுக்காடு உயர்வுடன் $70.45 ஆக நிலைபெற்றது.

ஓசிபிசி வங்கியின் பங்கு மதிப்பு $27ஐ கடந்து 8.46 விழுக்காடு வளர்ச்சியுடன் 27.43 டாலராகவும், யுஓபி வங்கியின் பங்கு மதிப்பு 44 டாலரைத் தாண்டி 10.12 விழுக்காடு வளர்ச்சியுடன் $44.38 ஆகப் பதிவானது.

வங்கிகளின் வலுவான நிதி மேலாண்மை, கவர்ச்சிகரமான ஈவுத்தொகை ஆகியவை தொடர்ந்து பங்குகளின் விலையை ஏற்றமாகவே வைத்திருக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் முதல் பங்குகளின் நிலையான வணிக தொகுதி அளவை (Board-lot size) 100 அலகுகளிலிருந்து 10 அலகுகளாகக் குறைக்க சிங்கப்பூர் பங்குச்சந்தை முடிவெடுத்துள்ளதால், நடுத்தர, சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது எளிதாகும்.

இது சந்தைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் இந்த வளர்ச்சி ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனால், சிங்கப்பூர் பங்குச் சந்தையின் முதன்மைக் குறியீடான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு இந்த வார இறுதியில் 4.29 விழுக்காடு உயர்ந்து 5469.29 புள்ளிகளை எட்டியது.

தங்கம் விலை

உலகளவில் தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டாலர் என்ற குறைந்தபட்ச அளவிலிருந்து மீண்டு எழுந்தது.

எனினும், அமெரிக்கா- ஈரான் இடையேயான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, பணவீக்கம் குறித்த அச்சம் மீண்டும் எழுந்ததால் தங்கத்தின் விலை வார இறுதியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,100 அமெரிக்க டாலர் என சரிவைச் சந்தித்தது.

எனினும், பாதுகாப்பான முதலீடாகவும், நீண்ட கால முதலீட்டு பன்முகப்படுத்துதலுக்கான காரணியாகவும் தங்கம் தொடர்ந்து முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வங்கிபங்குச் சந்தைடிபிஎஸ்ஓசிபிசியுஓபிவிலைஏற்றம்