குறைந்த வட்டி விகிதங்களின் அழுத்தம், நிச்சயமற்ற உலக நிலவரம் ஆகியவற்றுக்கு இடையிலும் சிங்கப்பூரின் மூன்று வங்கிகளும் இரண்டாம் காலாண்டில் தங்கள் வருவாயைத் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
அதில், செல்வவள நிர்வாகம் மீண்டும் ஒருமுறை வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது.
டிபிஎஸ் வங்கியின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 9 விழுக்காடு உயர்ந்து S$3.08 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஓசிபிசி வங்கியின் லாபம் 22 விழுக்காடு உயர்ந்து S$2.22 பில்லியனைப் பதிவு செய்துள்ளது.
மூன்றாவதாக, யுஓபி வங்கியின் நிகர லாபம் 10 விழுக்காடு அதிகரித்து S$1.48 பில்லியனாகப் பதிவானது.
ஆனால், இந்த புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இந்த மூன்று வங்கிகளும் ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான நிலவரம் குறித்தும் சீனாவின் புதிய வரி விதிகள் குறித்தும் ஆராய்கின்றன.
அத்துடன், நிகர லாபத்திற்கு செயற்கை நுண்ணறிவு பங்களிக்கும் சாத்தியம் இருப்பது போன்ற புதிதாக உருவெடுத்து வரும் அம்சங்கள் குறித்து அந்த மூன்று வங்கிகளும் சற்றே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவை ஒரு சாத்தியமான வருவாய் ஈட்டும் கருவியாக டிபிஎஸ் கருதுவதால், புதிய யோசனைகளை உருவாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகளை நினைவூட்டுதல் போன்ற செயல்பாடுகளுக்கு அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இது, பரிவர்த்தனை மற்றும் கட்டண வரவுகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.
ஒசிபிசி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி டான் டெக் லாங் ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டார்.
“எங்களிடம் குறிப்பாக ஒரு ஏஐ உத்தி என்று எதுவும் இல்லை,” என்று கூறிய அவர், செயற்கை நுண்ணறிவை அதன் சொந்த நலனுக்காகப் பின்பற்றுவதைவிட, அது பொருத்தமான இடங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், யுஓபி வங்கி, 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘மைக்ரோசாஃப்ட் கோபைலட்’ என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுள்ளதாகவும் வங்கி முழுவதும் 300க்கும் மேற்பட்ட ஏஐ பயன்பாட்டு நிகழ்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியது.


