சிங்கப்பூர் - பாத்தாம் கடலடிக் கம்பிவடம் ஆசியான் மின்னிலக்கப் பொருளியலை ஊக்குவிக்கும்: துணைப் பிரதமர் கான்

சிங்கப்பூர் - பாத்தாம் கடலடிக் கம்பிவடம் ஆசியான் மின்னிலக்கப் பொருளியலை ஊக்குவிக்கும்: துணைப் பிரதமர் கான்

2 mins read
76864970-46cc-48dd-b967-d35cae0c8093
சிங்கப்பூர் - பாத்தம் கடலடிக் கம்பிவட இணைப்பு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் (வலமிருந்து ஐந்தாவது). - படம்: சாவ்பாவ்

இந்தோனீசியாவின் பாத்தாமில் நோங்சா-சாங்கி கடலடிக் கம்பிவடம் இணைக்கப்படுவதன் மூலம் சிங்கப்பூர், இந்தோனீசியா மட்டுமன்றி பரந்து விரிந்த தென்கிழக்காசிய வட்டாரத்திற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய மின்னிலக்க வர்த்தகம், தரவுப் பரிமாற்றம், பணப் பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டின் பிற்பகுதியில் மின்னிலக்கக் கட்டமைப்பு உடன்பாட்டிற்கு 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் தயாராகி வரும் வேளையில் இந்த இணைப்பு சாத்தியமாகி உள்ளது.

கடலடிக் கம்பிவட இணைப்பு நிகழ்வில் உரையாற்றிய வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், வட்டார அளவிலான மின்னிலக்க ஒத்துழைப்பு வேகமடைந்து வரும் சூழலில் கடலடிக் கம்பிவடத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறினார்.

“நமது பொருளியல் மின்னிலக்க ரீதியாகவும் மின்னிலக்கக் கட்டமைப்பிலும் வேகமடைவது நமது பொருளியல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதொரு அடித்தளமாக விளங்குகிறது. அதனால்தான் நோங்சா- சாங்கி கம்பிவட இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது,” என்றார் அவர்.

இதுபோன்ற திட்டங்களுக்கு சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் ஒன்றையொன்று ஆதரிக்கும் வலுவைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய தொடர்பு, நம்பகமான வர்த்தகச் சூழல், உலக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றை சிங்கப்பூர் வழங்குவதாகவும் திரு கான் தெரிவித்தார்.

‘நோங்சா-சாங்கி கேபிள்’ (என்சிசி) கம்பிவடம் என்பது இந்தோனீசியாவின் ‘டெல்காம்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘டெலிகோமுனிகாசி இந்தோனீசியா இண்டர்நேஷனல்’, சிங்கப்பூரின் மின்னிலக்க உள்கட்டமைப்பு நிறுவனமான ‘பிடபிள்யூ டிஜிட்டல்’ ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.

ஏறத்தாழ 50 கிலோமீட்டர் நீளமும் 24 கண்ணாடி இழைகளையும் உள்ளடக்கிய இந்தக் கம்பிவடம், சிங்கப்பூர் நீரிணைக்குக் குறுக்கே பாத்தாமையும் சிங்கப்பூரையும் இணைக்கிறது.

இந்தோனீசியா - சிங்கப்பூர் கம்பிவட அமைப்புடன் இணைந்து டெல்காம் குழுமம் உருவாக்கி இருக்கும் இரண்டு பாத்தாம்-சிங்கப்பூர் கடலடிக் கம்பிவட இணைப்புகளில் ‘நோங்சா-சாங்கி கேபிள்’ இணைப்பும் ஒன்று.

குறிப்புச் சொற்கள்