இவ்வாண்டு சிங்கப்பூரின் 55 பெருஞ்செல்வந்தர்களின் (billionaires) மொத்த சொத்து மதிப்பு 258.8 பில்லியன் டாலர் (335 பில்லியன் வெள்ளி) என்று யுபிஎஸ் வங்கியின் சொத்து மதிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது, சென்ற ஆண்டு பதிவான 155.5 பில்லியன் டாலரைவிட 66.4 விழுக்காடு அதிகமாகும். சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் சுயமாக அந்த இடத்தைப் பிடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இப்பட்டியலில் இடம்பெற்ற 47 பேரும் புதிதாக சிங்கப்பூருக்குக் குடிபுகுந்த இருவரும் இவ்வாண்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளோரில் அடங்குவர். புதிதாக ஆறு பெருஞ்செல்வந்தர்கள் இவ்வாண்டு பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளோரில் 37 பேர் சுயமாக அந்த நிலையைப் படித்தவர்கள் என்று யுபிஎஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆகப் பெரிய வங்கியான யுபிஎஸ், சொத்து கவனிப்பில் உலகின் முன்னணி அமைப்பாகும்.
உலகளவில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில்தான் ஆக அதிக எண்ணிக்கையில் பெருஞ்செல்வந்தர்கள் இருப்பதாக யுபிஎஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா உட்பட இவ்வட்டாரத்தின் பல்வேறு பகுதிகள் மீண்டு வருவது ஆசிய பசிபிக்கின் சொத்து வளர்ச்சிக்குப் பங்காற்றியிருப்பதாக யுபிஎஸ்சின் சிங்கப்பூர் பிரிவுத் தலைவரும் ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான உலக சொத்து நிர்வாகப் பிரிவின் தலைவர்களில் ஒருவருமான யங் ஜி யீ கூறினார்.

