சிங்கப்பூரில் ஆறு இணையத்தளங்கள் முடக்கம்

சிங்கப்பூரில் ஆறு இணையத்தளங்கள் முடக்கம்

2 mins read
தீங்கிழைக்கும் தகவல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படலாம் எனச் சந்தேகம்
75642bc1-0c45-446f-b9ad-81e00e189dbf
இந்த இணையத்தளங்கள், தங்கள் துறை சார்ந்த பெயர்களில் சிங்கப்பூருடன் தொடர்புடைய சொற்களைப் பயன்படுத்தி, உள்ளூர் செய்தி இணையத்தளங்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்கின்றன. - படம்: சாவ்பாவ்

வெளிநாட்டுச் சக்திகளால் இயக்கப்படுவதாகவும், விரோதமான தகவல் பிரசாரங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள ஆறு இணையத்தளங்களை அணுகுவதிலிருந்து இணையப் பயனர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணையத்தளங்கள், தங்கள் துறை சார்ந்த (Domain) பெயர்களில் சிங்கப்பூருடன் தொடர்புடைய சொற்களைக் கொண்டு, உள்ளூர் செய்தி இணையத்தளங்களாகத் தங்களைக் காட்டிக்கொள்கின்றன என்று உள்துறை அமைச்சும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 23) வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

2025 பொதுத் தேர்தலின்போது, ​​மே 3ஆம் தேதி தேர்தலுக்கு முந்தைய 10 நாள் பிரசாரக் காலத்தில், அவற்றில் நான்கு இணையத்தளங்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிட்டன என்றும் அந்த அறிக்கை கூறியது.

குறிப்பாக, அந்த இணையத்தளங்களில் பெரும்பாலானவை 2025 ஏப்ரல் 15ஆம் தேதியன்று தேர்தல் ஆணை வெளியிடப்பட்ட பின்னரே செயல்படத் தொடங்கின என்று அது மேலும் கூறியது.

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சு, சிங்கப்பூரில் அந்த ஆறு இணையத்தளங்களின் பயன்பாடு குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியது.

மேலும், அந்த ஆறு இணையத்தளங்களும் இதுவரை சிங்கப்பூருக்கு எதிரான விரோதமான தகவல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றும் அது தெரிவித்தது.

இருப்பினும், அந்த இணையத்தளங்கள், பிற நாடுகளில் இதுபோன்ற பிரசாரங்களையும் செல்வாக்குப் பிரசாரங்களையும் நடத்தியதாகக் கூறப்படும் போலியான இணையத்தளங்களின் கட்டமைப்புகளுடன் தொடர்புடையவை.

வெளிநாட்டுச் சக்திகளால் தலையீடு

மேலும், சிங்கப்பூருக்கு எதிராக அவற்றை நடத்துவதற்கு வெளிநாட்டுச் சக்திகளால் இவை பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் அது மேலும் கூறியது. “எனவே, சிங்கப்பூரில் உள்ள பயனர்கள் இவற்றை அணுகுவதை முடக்குவது பொது நலனுக்கு உகந்தது,” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆறு தளங்களில் ஐந்து, கூகலின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு மற்றும் அதன் இணையப் பாதுகாப்பு துணை நிறுவனமான ‘மாண்டியன்ட்’ ஆகியவற்றால் சுட்டிக்காட்டப்பட்ட, நம்பகத்தன்மையற்ற செய்தி இணையத்தளங்களின் கட்டமைப்புடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர். நம்பகத்தன்மை இல்லாமை, தவறான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைப் பரப்பியதற்காக அவை கண்டறியப்பட்டிருந்தன.

படம்:
படம்: - ‘தி சிங்கப்பூர் டைம்ஸ்’ இணையத்தளம்

அவை: singaporeheadline.com, singaporeweek.com, singapore24hour.com, nanyangweekly.com, singaporebuzz.com. அந்த இணையத்தளங்களின் உரிமையாளர்கள் குறித்த எந்தப் பொதுத் தகவலும் இல்லை. ஆறாவது இணையத்தளமான sgtimes.com, சீனாவின் ஜியாங்சுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது வழக்கமான கண்காணிப்பின் மூலம் 2024, 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அந்த ஆறு போலியான இணையத்தளங்கள் குறித்துத் தெரியவந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த இணையத்தளங்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் முழுமையாக விசாரித்து, சிங்கப்பூரில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும், அவை வெளிநாட்டுச் சக்திகளால் பயன்படுத்தப்பட்டனவா என்பதையும் மதிப்பிடுவதற்கு நேரம் தேவைப்பட்டதால், இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சு விளக்கியது.

குறிப்புச் சொற்கள்