சரக்குப் போக்குவரத்து மைய அந்தஸ்தை கட்டிக்காக்க சிங்கப்பூர் அதிக முதலீடு

2 mins read
169fc863-8015-4a45-9dfb-5e6db2ef2a56
நம்பத்தகுந்த வட்டார சரக்கு மையம் என்ற நிலையைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் தனது உள்கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் ஊழியரணியில் மேலும் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சரக்குப் போக்குவரத்தில் மாற்றம் நிகழும் வேளையிலும் விநியோகத் தொடர் இடர்ப்பாடுகள் அதிகரிக்கும் நிலையிலும் சிங்கப்பூர் அதன் கடல்துறையையும் விமானப் போக்குவரத்து நடுவம் என்னும் நிலையையும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறது.

நம்பத்தகுந்த வட்டார சரக்கு மையம் என்ற நிலையைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் தனது உள்கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் ஊழியரணியில் மேலும் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது.

2025ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும், சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கான சிறந்த நகரமாக பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தேர்ந்து எடுக்கும் என்றும் சரக்குகளை மாற்றுவதற்கான சிறந்த பன்முனை மையமாக சிங்கப்பூர் திகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் உலகத் தளவாட தலைமைத்துவம் என்னும் நிலையை பலப்படுத்துவது, அதன் தொடர்பில் வளரும் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு முதலீடுகள் செய்யப்படுகின்றன.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் வழியாகச் செல்லும் கடல் மற்றும் வான் வழி சரக்குகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விரைவாக மாற்றும் பன்முனை முயற்சிகளில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளதாக அவற்றின் அதிகாரிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.

அதேபோல, முன்னணி வட்டாரத் தளவாட நிறுவனங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளையும் சேவைகளையும் விரிவுபடுத்த ஊக்கமளிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் பன்முனை தளவாடத் திறன்களை அதிகரிக்கவும் எளிமைப்படுத்தவும் தேவையான அம்சங்களை உள்ளடக்கிய முன்மாதிரி கைப்பேசிச் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் டிசம்பர் 20ஆம் தேதி தெரிவித்து இருந்தார்.

கப்பல் நிறுவனங்களுக்கும் தளவாட நிறுவனங்களுக்கும் அதிக வசதியை அந்தச் செயலி வழங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர்கள் கூறினர்.

நிகழ்நேர கப்பல் மற்றும் விமான வருகை, அவற்றின் நிகழ்நேர நிலவரம், சரக்குக் கப்பல் மற்றும் விமானத்திற்கான முன்பதிவு, வருகை தாமதம் குறித்த முன்கூட்டிய அறிவிப்பு போன்ற அம்சங்கள் செயலியில் இடம்பெறும்.

கடல், வான் இடையிலான சரக்குப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வகுக்கப்பட்ட ‘செயல்பாட்டுக்கான கூட்டணி’ என்னும் நடவடிக்கையின்கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

நிச்சயமற்ற கப்பல், விமானப் பயணம், ஆட்கள் மூலம் செயல்படுத்தும் சிறு தளவாட நிறுவனங்களின் நடைமுறை போன்றவை காரணமாக கப்பல், வான் பன்முனை சரக்கு மாற்றத்திற்கு ஐந்து நாள்களுக்கு மேல் ஆவதாக கடந்த மார்ச் மாதம் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்து இருந்தார்.

அந்த நேரத்தைப் பாதியாகக் குறைப்பது அமைச்சின் நோக்கம் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டு இருந்தார்.

குறிப்புச் சொற்கள்