பட்ஜெட்: கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு $6.4 பில்லியன் உதவித்திட்டம்

2 mins read
9f7d7fd0-ee50-45d2-b810-175a429985cb
பராமரிப்பு மற்றும் ஆதரவு தொகுப்புத் திட்டம் எனப்படும் ஒரு சிறப்பு $1.6 பில்லியன் திட்டம் மூலம் குடும்பங்கள் மேலும் பல உதவிகளைப் பெற்று வாழ்க்கைச் செலவை ஈடுகட்டலாம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்படும் நிறுவனங்கள், குடும்பங்கள், அமைப்புகளுக்கு உதவுவதற்காக $6 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்டுவரும் பாதிப்புகளைச் சமாளித்து பொருளியலை நிலைப்படுத்தவும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தும் பாதக விளைவுகளின் தாக்கத்தைக் குறைக்கவும் இன்று புதிய வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு திட்டங்களையும் உத்திகளையும் நடவடிக்கைகளையும் அறிவித்தார்.

வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் ஊழியர்களைப் பாதுகாக்க $4 பில்லியன் உதவித்திட்டம் நடப்புக்கு வரும்.

இதன் தொடர்பில் அத்திட்டம், நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும். கிருமித்தொற்று காரணமாக நேடியாகப் பாதிக்கப்படும் தொழில்துறைகளுக்குக் கூடுதல் ஆதரவையும் அது வழங்கும்.

பராமரிப்பு மற்றும் ஆதரவு தொகுப்புத் திட்டம் எனப்படும் ஒரு சிறப்பு $1.6 பில்லியன் திட்டம் மூலம் குடும்பங்கள் மேலும் பல உதவிகளைப் பெற்று வாழ்க்கைச் செலவை ஈடுகட்டலாம். இத்திட்டம் வசதி குறைந்தவர்களுக்கு அதிகம் உதவும்.

இவை ஒருபுறம் இருக்க, கொரானாவை எதிர்த்துப் போராடிவரும் முன்னிலை அமைப்புகளுக்கு ஆதரவு தரும் வகையில் $800 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் சேர்த்து மொத்தம் $6.4 பில்லியன் உதவித் திட்டம் மக்களுக்கு உதவும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கிருமித்தொற்று காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், உணவு சேவைகள், வழி நில்லா போக்குவரத்து துறைகள் ஆகியவை கூடுதல் ஆதரவைப் பெறும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

"சூழ்நிலையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிப்போம். தேவை எனில் இன்னும் அதிக உதவிகள் வழங்க முடியும். வழங்க ஆயத்தமாக உள்ளோம்," என்று நிதி அமைச்சர் தனது 5வது வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

வரவுசெலவுத் திட்டம் பற்றிய விரிவான செய்திகளுக்கு நாளைய (பிப்ரவரி 19) தமிழ்முரசு அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#Budget #Singapore #தமிழ்முரசு #கொரோனா

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்