2026 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட இருக்கும் சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு சிங்கப்பூரர்களுக்கு நிதி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரைக்குமான நிதி ஆண்டுக்குரிய வரவுசெலவுத் திட்ட அறிக்கை எனப்படும் நிதிநிலை அறிக்கையை சிங்கப்பூர் தாக்கல் செய்வது வழக்கம்.
நடப்பு நிதிஆண்டில் திருத்தப்பட்ட அரசாங்க வருவாய் மற்றும் செலவினம் ஆகியவற்றோடு வரும் நிதி ஆண்டுக்குரிய மதிப்பீடுகளை அந்த அறிக்கை உள்ளடக்கி இருக்கும்.
எனவே, தற்போது தயாரிக்கப்பட்டு வரும் நிதிநிலை தொடர்பாக தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் வர்த்தகங்களும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், யோசனைகளும் கருத்துகளும் தேவைப்படும் அம்சங்களைக் கேள்வி வடிவில் பட்டியலிட்டுள்ளது.
பொருளியலை நவீனப்படுத்துவது, சிறந்த வேலைகளை உருவாக்குவது, சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து முன்னேற்றம் காண்பது என்னும் தலைப்புகளில் அவை உள்ளன.
சிங்கப்பூரில் புத்தாக்கச் சூழலை வளப்படுத்த வலுவான நிறுவனக் கலாசாரத்தை எவ்வாறு கட்டி எழுப்பலாம், உலக நிறுவனங்களோடு போட்டியிட்டு, வளரத் துடிக்கும் நிறுவனங்களை எவ்வாறு ஆதரிக்கலாம் என்பன போன்ற கேள்விகள் நவீன பொருளியல் அம்சத்தில் இடம்பெற்றுள்ளன.
நிச்சயமற்ற போக்கு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் நமது மாணவர்களையும் ஊழியர்களையும் சிறந்த வேலைகளுக்குத் தயார் செய்து முன்னேற்றுவது எங்ஙனம், ஊழியர்கள் தங்களது திறன்களைக் காலத்திற்கேற்ப மேம்படுத்துவதில் உள்ள தடைகள் எவை, அதில் அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்பன போன்ற கேள்விகள் ‘சிறந்த வேலைகள்’ என்னும் தலைப்பில் உள்ளடங்கி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எந்தவொரு பின்னணியைச் சேர்ந்த குழந்தையும் சாதிப்பதற்குத் தேவையான வாய்ப்புகளை எவ்வாறு உறுதி செய்யலாம், மூத்தோர் சிறந்த முறையில் மூப்படைவதற்கும் தேவையுள்ள மூத்தோருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்கும் நாம் எந்தெந்த வகைகளில் உறுதி அளிக்க முடியும் என்பன போன்றவை ‘சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து முன்னேற்றம் காண்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் சிங்கப்பூர் பட்ஜெட் இணையத்தளம், ரீச் பட்ஜெட் 2026 குறுந்தளம், ரீச் சிங்கப்பூர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்கள், ShareYourViews இணையப்பக்கம் ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

