இந்தியாவில் முதலாவது சிங்கப்பூர் வர்த்தக நிலையம் திறப்பு

2 mins read
6484e0b7-c961-4bfd-a8a4-12ef126b8f8d
வெளியுறவு, வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (நடுவில்) முன்னிலையில், ஜேவிகேஎம் (JVKM) குழுமத்தின் இயக்குநர் ஜெகதீ‌ஷ் இளங்கோ, ‘எல்ஏசி குளோபல்’ மூத்த நிர்வாகி கேரன் ஃபாங் இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். - படம்: சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம்

சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் (எஸ்பிஎஃப்) இந்தியாவில் தனது முதல் சிங்கப்பூர் வர்த்தக நிலையத்தை பெங்களூரில் வியாழக்கிழமை (நவம்பர் 13) திறந்தது.

இந்தியாவில் கால்பதிக்கத் திட்டமிடும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு, குறிப்பாக சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கு அந்நிலையம் துணைபுரியும்.

தென்கிழக்காசியாவிற்கு வெளியே சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் தனது வர்த்தக நிலையத்தைத் திறந்திருப்பது இதுவே முதன்முறை.

ஏற்கெனவே ஜகார்த்தா, ஹோ சி மின், பேங்காக் உள்ளிட்ட நகரங்களில் சிங்கப்பூர் வர்த்தக நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர், எஸ்பிஎஃப் இணைந்து நடத்தும் ‘குளோபல்கனெக்ட்@எஸ்பிஎஃப்’ முயற்சியின் ஓர் அங்கமாக இது இடம்பெறுகிறது.

அடுத்த ஈராண்டுகளில் எஸ்இசி@பெங்களூரு 470க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஈடுபடுத்தவுள்ளது.

எஸ்இசி@பெங்களூரு திறப்புவிழாவிற்கு வெளியுறவு, வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் வருகையளித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அவ்விழாவில், எல்ஏசி குளோபல் (LAC Global) பிரைவேட் லிமிடெட், ஜேவிகேஎம் (JVKM) கன்சல்டன்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிட்எட் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜேவிகேஎம் கன்சல்டன்ட்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜேவிகேஎம் குழுமம், எல்ஏசி குளோபல் இரண்டுமே சிங்கப்பூர் நிறுவனங்கள்.

‘எல்ஏசி’யின் ஊட்டச்சத்துப் பொருள்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து, அந்நாடு முழுவதும் விநியோகிக்கும் தனியுரிமையைப் பெற்றுள்ளது ஜேவிகேஎம் கன்சல்டன்ட்ஸ் (இந்தியா).

அது, ‘மித்ரா வெல்னஸ்’ எனும் வணிக முத்திரையின்கீழ் (https://mitraawellness.com/) ‘எல்ஏசி’ பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.

எஸ்இசி@பெங்களூரு தங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று ஜேவிகேஎம் குழுமத்தின் பிரதிநிதி கூறினார்.

“உரிமங்கள், ஏற்றுமதித் தடைகள் அல்லது சுங்கவரிகள் தொடர்பான எந்தச் சிக்கலுக்கும் இனி இந்த அலுவலகத்தை அணுகி விரைவாகத் தீர்வுகாணலாம்,” என்றார் அவர்.

“இந்தியாவில் சிங்கப்பூர் முத்திரைக்கென ஒரு நம்பகத்தன்மை உள்ளது. சிங்கப்பூர் சட்டங்கள் வலுவாக உள்ளதால் இங்கிருந்து ஏற்றுமதி செய்பவற்றின் தரம் உயர்வாக உள்ளன. நாம் சிங்கப்பூர் நிறுவனம் என்பதால் சிங்கப்பூர் முத்திரைகொண்ட பொருள்களையே இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல விரும்பினோம்,” என்றார் அவர்.

‘எஸ்இசி@பெங்களூரு பேருதவியாக இருக்கும்’

எஸ்இசி@பெங்களூருக்கு எஸ்பிஎஃப் சந்தை ஆலோசகர்கள் கொண்ட ஒரு குழு தலைமைதாங்கும். உள்ளூர்த் தொழில்துறைச் சேவை வழங்குநர்களும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவிசெய்வார்கள்.

இந்தியா - சிங்கப்பூர் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு, ஆசியான் - இந்தியா தடையற்ற வர்த்தக வட்டாரம் போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி முன்னேறவும் இது வாய்ப்பளிக்கும்.

புதிய எஸ்பிஎஃப்-இந்திய வர்த்தகச் செயற்குழு

புதிய எஸ்பிஎஃப் - இந்திய வர்த்தகச் செயற்குழு (SBF-IBC) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் இந்தியா, சிங்கப்பூர் நிறுவனங்களிலிருந்து முன்னணி வர்த்தகத் தலைவர்கள் இடம்பெறுகின்றனர். யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் பிரசூன் முகர்ஜி அதற்குத் தலைமைதாங்குவார்.

உலகின் நான்காவது பெரிய பொருளியலான இந்தியாவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ஆக அதிக அந்நிய நேரடி முதலீடு செய்யும் பங்காளியாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.

குறிப்புச் சொற்கள்