சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்கள் லியூ மன் லியோங்கும் லீ சியாவ் ஹியாங்கும் பூட்டான் நாட்டின் ‘கெலஃபூ மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி’யின் (ஜிஎம்சி) உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் அவர்களை அப்பதவிகளில் நியமித்தார்.
பூட்டானின் புதிய பொருளியல் நடுவமான ஜிஎம்சி பொருளியல், சமூக மேம்பாட்டின் முக்கியக் கொள்கைகளை மறுவடிவமைப்பதில் கவனம் செலுத்தும்.
மேலும், சிறப்பு நிர்வாக வட்டாரமாக அது செயல்படும்.
ஜிஎம்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு லியூ மன் லியோங் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிஎம்சியின் வருங்காலத் தலைமைத்துவத்தை ஏற்கும் வகையில் பூட்டானியத் திறனாளர்களை வளர்ப்பதில் இவர் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது. கேபிடாலேண்ட், சாங்கி விமான நிலையக் குழுமம், சர்பானா ஜூரோங் குழுமம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
திரு லீ சியாவ் ஹியாங், சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி. இவர் ஜிஎம்சியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமைத்துவத்தின்கீழ் சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையம் 2017ல் திறக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜுவல் சாங்கி திறக்கப்பட்டது. சாங்கி விமான நிலையம் உலகின் முன்னிலை விமான நிலையங்களில் ஒன்றாகத் தொடர்ந்து மேம்பாடு கண்டதில் இவரது பங்கு உண்டு.