வர்த்தகப் பூங்காக்களில் 14 ஆண்டு காணாத காலி இடங்கள்

2 mins read
5cef7e2d-bcaa-4f9c-b8bd-07843dd77e30
காலியிடங்கள் அதிகரிக்கும் அதேநேரம் வர்த்தகப் பூங்காகளில் வாடகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. - படம்: சேவில்ஸ் சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வர்த்தகங்களுக்கு இடவசதி அளிக்கும் கட்டடங்களில் 14 ஆண்டு காணாத அளவுக்கு அதிகமான காலியிடங்கள் உள்ளதாக ‘சேவில்ஸ் ரிசர்ச்’ (Savills Research) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024 நான்காம் காலாண்டில் அந்த வர்த்தகப் பூங்காக்களில் 22.1 விழுக்காடு இடங்கள் காலியாக இருந்தன.

2023 நான்காம் காலாண்டில் காலியாக இருந்த 21.6 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.

வர்த்தகப் பூங்காக்களுக்கான ஒட்டுமொத்த சந்தை நிலவரம் மந்தநிலையில் தொடருவதாக சேவில்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் முதற்கட்டப் பணிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறைவுபெற்றதும் கட்டடங்களில் காலி இடங்கள் அதிகரிக்க ஒரு காரணம் என்றது அறிக்கை.

அதிகமான வர்த்தக அலுவலக இடங்கள் காலியாக இருந்தது சாய் சீயில் உள்ள ‘இஎஸ்ஆர் பிஸ்பார்க்’கில்தான்.

2024 நான்காம் காலாண்டில் அங்கு சாதனை அளவாக 31.8 விழுக்காடு இடப்பரப்பு வர்த்தகங்கள் இன்றி காலியாக இருந்தது.

மேப்பிள்ட்ரீ பிஸ்னஸ் சிட்டியிலும் சைன்ஸ் பார்க்கிலும் 15.4 விழுக்காடு காலி இடங்கள் காணப்பட்டன. இது 2023 நான்காம் காலாண்டில் பதிவான 13.7 விழுக்காட்டைவிட அதிகம்.

காலியிடங்கள் அதிகரிக்கும் அதேநேரம் வர்த்தகப் பூங்காக்களின் வாடகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இருப்பினும், 2024 நான்காம் காலாண்டில் வாடகை நிலவரத்தைக் குறிப்பிடும் ஜேடிசி வாடகைக் குறியீடு 1.9 விழுக்காடு என்னும் மெதுவான வளர்ச்சியைச் சந்தித்தது.

ஓராண்டுக்கு முன்னர் அது 3.4 விழுக்காடாக இருந்தது.

முதன்மை வர்த்தகக் கட்டங்களின் மாத வாடகை 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 6.4 விழுக்காடு அதிகரித்து சதுர அடிக்கு $6.27 என்று பதிவானது.

வாடகைத் தரவுகளின் பதிவு தொடங்கிய 2013ஆம் ஆண்டு முதல் இதுவே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்