தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
நான்கு நாள் வேலை வாரம்

ஆய்வின் கண்டுபிடிப்பு குறித்து சிங்கப்பூர் நிறுவனங்கள் சந்தேகம்

2 mins read
b16fc13e-2677-4458-8fee-ee476577efe8
2024 மார்ச் 14ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், ராஃபிள்ஸ் பிளேசில் அலுவலக ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நான்கு நாள் வேலை வாரம் ‘சாத்தியம்’ எனக் கிட்டத்தட்ட 10ல் ஏழு நிறுவனங்கள் கண்டறிந்ததாகக் கூறும் அண்மைய ஆய்வு ஒன்று, உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம் என முதலாளிகள் கூறியுள்ளனர்.

ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனமான ராபர்ட் வால்டர்ஸ் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) வெளியிட்டிருந்த ஆய்வறிக்கை, சிங்கப்பூரில் 100க்கும் குறைவான நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியிருந்தது. அதில், நான்கு நாள் வேலை வாரம் ‘சாத்தியமான நடைமுறையே’ என 69 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.

ஆசியா எங்கிலும் 11 சந்தைகளில் 5,000க்கும் மேற்பட்ட நிபுணர்கள், நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட வட்டார அளவிலான ஆய்வின் ஒரு பகுதியாக இது அமைந்தது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ஆங் இயூட், ஆய்வின் இந்தத் தகவல் தற்போதைய தொழில் சூழலை வெளிப்படுத்துவதாக இல்லை என்றார்.

சங்கத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 80 உறுப்பினர்களிடம் பின்னர் நடத்தப்பட்ட கருத்தாய்வைச் சுட்டிய அவர், “இதே கேள்வியை நாங்கள் முன்வைத்தோம். ‘இல்லை, இது சாத்தியமில்லை’ என 70 விழுக்காட்டினருக்கும் மேலானோர் கருதினர்,” என்றார்.

இதுகுறித்து பிஸ்னஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ராபர்ட் வால்டர்ஸ் சிங்கப்பூர் நிறுவனப் பேச்சாளர், “நான்கு நாள் வேலை வாரம் சாத்தியம் என 69 விழுக்காட்டினர் கருதுவதால், அதைச் செயல்படுத்த அவர்கள் தயார் என்று அர்த்தமாகாது. மாறாக, அந்த நடைமுறை சாத்தியமே என்றே அவர்கள் கருதுகின்றனர்,” என்றார்.

“எண்ணத்துக்கும் செயல்பாட்டுக்கும் இடையே இன்னும் முரண்பாடு இருக்கலாம்,” என்று அவர் எடுத்துரைத்தார்.

அதே ஆய்வில், அடுத்த ஈராண்டுகளுக்குள் நான்கு நாள் வேலை வாரத்துக்கு மாற தங்களிடம் திட்டங்கள் உள்ளன அல்லது பரிசீலித்து வருகிறோம் என வெறும் 18 விழுக்காட்டு சிங்கப்பூர் நிறுவனங்களே கூறின. ஒப்புநோக்க, தென்கிழக்காசிய அளவில் இந்த விகிதம் சராசரியாக 37 விழுக்காடாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்