புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள், புதிய போர்க்கால காலாட்படை வாகனங்கள் ஆகியவற்றை வாங்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
புதிய போர்க்கால காலாட்படை வாகனங்கள் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உடையவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் தனது கடல்துறை சுற்றுக்காவல் விமானத்தை சிங்கப்பூர் மாற்ற இருக்கிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படையை மேம்படுத்த இவை கொள்முதல் செய்யப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் திங்கட்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற தற்காப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது தெரிவித்தார்.
வேகமாக மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூரின் பாதுகாப்பை வலுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
2025க்கான நிதி ஆண்டில் தற்காப்பு அமைச்சின் செலவினம் கடந்த நிதி ஆண்டைவிட ஏறத்தாழ $23.4 பில்லியன் அல்லது 12.4 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திட்டங்கள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் 2025க்கான செலவினம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் இங் கூறினார்.
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்யும் திட்டம் சிங்கப்பூர் அரசு கடற்படை நிர்ணயித்தபடி நடந்து வருவதை அமைச்சர் இங் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அவை அனைத்தும் சிங்கப்பூர் கடற்படையின் தேவைகளுக்கு ஏற்பட ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை.
அந்த நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களும் 2028ஆம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டில் இருக்கும்.
வலுவான நீர்மூழ்கிக் கப்பல் படைக்கு வெறும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல் போதாது என்று அமைச்சர் இங் தெரிவித்தார்.
நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அடிக்கடி பராமரிப்புப் பணிகள் தேவைப்படுவதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
எனவே மேலும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க சிங்கப்பூர் ஆயுதப் படை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இங் கூறினார்.
இதற்கிடையே, ராணுவத்தின் காலாட்படைப் பிரிவுக்காகப் புதிய போர்க்கால வாகனஙம் வாங்கப்படும்.
இந்த வகை வாகனம் ‘டைட்டன்’ என்று அழைக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஆகாயப் படை அதன் ஃபோக்கர்-50 ரக கடல்துறை சுற்றுக்காவல் விமானத்தை மாற்ற இருப்பதாக அமைச்சர் இங் கூறினார்.