மின் கட்டண உயர்வைச் சமாளிக்க சிக்கனம்: டான் சீ லெங் வலியுறுத்து

மின் கட்டண உயர்வைச் சமாளிக்க சிக்கனம்: டான் சீ லெங் வலியுறுத்து

2 mins read
f2d9822c-f6cf-47b1-9d79-7b3cd8a09fb1
எரிவாயு விலை ஏற்றம் மின்சாரக் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேவைகளுக்குப் போதுமான எரிசக்தி இருப்பு உள்ளதை உறுதிசெய்ய பல்வேறு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றபோதிலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பூசல் உலகளவில் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

“எனவே, அடுத்து வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என நாம் எதிர்பார்க்கலாம்,” என்றார் அவர்.

“இந்தத் தருணத்தில் குடும்பங்களும் வர்த்தகங்களும் முக்கியப் பங்கு வகிக்கவேண்டிய நிலை உள்ளது. மின்சாரத்தை அவை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும் எரிசக்தியைச் சேமிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் விலை ஏற்றத்தின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய இயலும்.

“தேவை எழும்போது குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் கைகொடுத்து உதவ அரசாங்கம் தயாராக உள்ளது,” என்று டாக்டர் டான் வியாழக்கிழமை (மார்ச் 12) காலை வெளியிட்டுள்ள தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

சென்ற மாதம் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தகுதியுள்ள வீவக குடும்பங்கள் பயனீட்டுக் கட்டணங்களை ஈடுசெய்ய, வழக்கமான தொகையைவிட ஒன்றரை மடங்கு கூடுதலான யு-சேவ் கட்டணக் கழிவுகளைப் பெறுவார்கள் அல்லது நிதியாண்டில் $570 வரையிலான கழிவுகளைப் பெறுவார்கள் என்றார்.

“மத்திய கிழக்கு ஒரு முக்கிய எரிபொருள் உற்பத்தி வட்டாரம். அந்த வட்டாரத்திலிருந்து கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் எண்ணெய்யில் 25 விழுக்காடும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 19 விழுக்காடும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே செல்ல வேண்டும்.

“ஆனால், ஈரானுடனான போர் காரணமாக அந்த ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

“அதனால், விரைவில் உலக எரிபொருள் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்று டாக்டர் டான் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “உலகளாவிய சூழலால் எரிபொருள் விலைகளில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களும் விநியோகத்தில் இடையூறுகளும் ஏற்படுவதுண்டு.

“அதைப் போன்ற விளைவுகள் சிங்கப்பூரில் உணரப்படுகின்றன. நமது மின்சார உற்பத்தியில் 95 விழுக்காட்டுக்கு நாம் இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயு பயன்படுகிறது.

“சிங்கப்பூர் தற்போது இறக்குமதி செய்யும் எரிவாயுவில் பாதியளவு மத்திய கிழக்கு வட்டார நாடுகளிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. அதனால், அதன் விநியோகம் பாதிக்கப்படவில்லை.

“மேலும், எரிவாயு மற்றும் டீசல் கலவையைக் கொண்ட எரிபொருள் நம்மிடம் இருப்பில் உள்ளது. எரிவாயு விநியோகத்தில் கடுமையான இடையூறு ஏற்பட்டால் மின் உற்பத்தி நிறுவனங்கள் அதனைப் பயன்படுத்தலாம்,” என்றும் டாக்டர் டான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்