கரிமத்தைச் சேகரித்து அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த எரிசக்திச் சந்தை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூர் இன்னும் பல ஆண்டுகளுக்கு புதைபடிவ எரிபொருளைச் சார்ந்தே இயங்கும் சூழல் காணப்படுவதால், இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யப்படும்போது வெளியாகும் கரியமில வாயுவை அகற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது.
வரும் 2035ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் எரிசக்தித் தேவையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆற்றல் இயற்கை எரிவாயு மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், கரியமில வாயுவைப் பிடித்து, அகற்றும் நோக்குடன் அதனைச் சேமிப்பதற்காக எரிசக்தித் துறையில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்து இரு வழிகளை ஆராய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தையொட்டி துணைப் பிரதமர் கான் கிம் யோங் இந்த விவரத்தை திங்கட்கிழமை (அக்டோபர் 21) தெரிவித்தார்.
முதலாம் முறை, இயற்கை எரிவாயு முற்றிலுமாக எரிக்கப்பட்ட பின்னர் வெளியாகும் வாயுவிலிருந்து கரியமில வாயுவை மட்டும் தனியாகப் பிரித்து எடுப்பதற்கான பிரிவை நிறுவுவது.
கழிவாக வெளியேறும் வாயுவில் கரிமம், நீராவி, நைட்ரஜன் மற்றும் உயிர்வாயு கலந்திருக்கும்.
குறைவான அடர்த்தியுடன் வெளியாகும் வாயுவைப் பிரிப்பது கடினம் என்பதால், இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் கரியமில வாயுவைப் பிரித்தெடுக்க செலவு குறைந்த வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக இதற்கு முன்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது முறை, இயற்கை எரிவாயு மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்போது உருவாகும் கரியமில வாயுவைப் பிடிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்வது.
அதேநேரம், மின்சாரத்தைத் தயாரிக்க ஹைட்ரஜனை எரிக்கலாம். அவ்வாறு எரிக்கும்போது கரியமில வாயு வெளியாகாது.
இருப்பினும், உற்பத்தி நடைமுறையின்போது கரியமில வாயு இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின்னரே அது தூய எரிபொருளாகக் கருதப்படும்.
சிங்கப்பூரில் உள்ள புதிய, மேம்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மின் உற்பத்தி ஆலைகள் இவ்வாண்டு முதல் குறைந்தபட்சம் 30 விழுக்காடு ஹைட்ரஜனைப் பயன்படுத்த வேண்டும்.
அத்துடன், வருங்காலத்தில் 100 விழுக்காடு ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் வகையில் சீரமைப்புத் திட்டடங்களை அவை கொண்டிருக்க வேண்டும்.