பெரிதும் பிளவுபட்டு வரும் உலகில் கனிவன்பால் சிங்கப்பூர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்று கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் சேவைத்துறையில் சிறந்து விளங்கும் ஊழியர்களைச் சிறப்பிக்கும் தங்கச் சேவை விருதுகள் (Service Gold Awards) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
‘ஒன் ஃபேரர்’ ஹோட்டல் வளாகத்தில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் 143 ஹோட்டல் சேவைத்துறை ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த திரு தினேஷ், குறிப்பாக தற்போது அன்பையும் கனிவன்பையும் கொண்டாட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டார்.
“உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்கும்போது எதிர்மறைத்தன்மை, கொடுமை மற்றும் பிரிவினையை அதிகமாக உணர முடிகிறது,” என்றார்.
சிறிய நாடாக இருந்தபோதும் இதுபோன்ற அங்கீகாரம் இருப்பதால் சிங்கப்பூர் அர்த்தமுள்ள, உறுதியான வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது என்று திரு தினேஷ் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கமும் சிங்கப்பூர் ஹோட்டல் சங்கமும் இணைந்து 31வது ஆண்டாக ஏற்பாடு செய்த இந்தத் தங்கச் சேவை விருது நிகழ்ச்சியில் ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்டனர்.
உன்னத சேவைக்காக இவ்வாண்டு ஏழு ஊழியர்கள் விருது பெற்றனர். இந்தப் பிரிவுக்கு 31 பேர் முன்மொழியப்பட்டிருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
“ஹோட்டல் ஊழியர்கள் காட்டும் அன்பு அதிகமான விருந்தினர்களுக்கு போய்ச் சேர்கிறது என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன,” என்றார் துணையமைச்சர் தினேஷ்.
உன்னத சேவை பெற்ற ஊழியர்களில் ஒருவர் பத்மினி சதிமுருகன், 30.
தற்போது வில்லேஜ் ஹோட்டல் ஆல்பர்ட் கோர்ட் விடுதியில் விருந்தினர் சேவைகளுக்கான நிர்வாகியாக பணிபுரியும் பத்மினி, மலேசியாவில் அத்துறை சார்ந்த பட்டப்படிப்பை முடித்ததாக தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
விருது பெற்றது சற்று பதற்றமான உணர்வாக இருந்தாலும் மனநிறைவாகவும் உள்ளது என்று அவர் சொன்னார்.
“இந்தத் துறையில் இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

