சிங்கப்பூரில் அண்மையில் நடந்த யூத எதிர்ப்புச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது: சண்முகம்

2 mins read
f45c4927-eb91-45f2-8459-7d0c752bfaac
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மையில் பல யூத எதிர்ப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு கவலைக்குரிய விவகாரம் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில், யூத மாணவர்கள் இருந்த அனைத்துலகப் பள்ளிகளில் உள்ள சில கழிப்பறைகள் இஸ்ரேல் எதிர்ப்பு ஆபாச வார்த்தைகளால் சேதப்படுத்தப்பட்டதாக திரு சண்முகம் விழாயக்கிழமை (நவம்பர் 6) கூறினார்.

அக்டோபரில், வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் வழியில் தலையில் யூத தொப்பி அணிந்த ஒரு யூதர் ஒருவர், சாலையில் வாகனத்தில் செல்லும் மற்றொருவர் ‘பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்’ என்று தம்மை நோக்கி கூச்சலிடுவதைக் கேட்டார்.

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலால் ஏற்பட்ட உலகளாவிய பதற்றங்களைத் தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

திரு சண்முகம், ஆக்ஸ்லி ரைசுக்கு அருகிலுள்ள செசெட்-எல் யூத வழிபாட்டுத் தலத்தில் யூத சமூக உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார்.

நவம்பர் 6ஆம் தேதி செசெட்-எல் யூத வழிபாட்டுத் தலம் அதன் 120வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இதில், சமயங்களுக்கு இடையேயான அமைப்பின் உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் யூத எதிர்ப்புச் செயல்கள் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டா என்று திரு சண்முகம் கூறினார்.

“சிங்கப்பூரில் சட்டங்களும் விதிமுறைகளும் மிகவும் எளிமையான கொள்கையை வெளிப்படுத்துகின்றன. இனத்தையும் சமயத்தையும் பொருட்படுத்தாமல் அனைவரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் தங்கள் சமயத்தைச் சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று திரு சண்முகம் கூறினார்.

“அவர்கள் பாகுபாடு, துன்புறுத்தல், வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், சிங்கப்பூரில் உள்ள அனைத்துச் சமூகங்களும், பாலஸ்தீனம் அல்லது இஸ்ரேல் மீதான தங்கள் உணர்வுகள் எதுவாக இருந்தாலும், இங்கே அனைத்து சிங்கப்பூரர்களும் பாதுகாப்பாகவும் மதிப்புடனும் நடத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.

யூத சமூகத்தினர் இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் சந்தித்த விரும்பத்தகாத சம்பவங்களைப் பற்றி அவர்களிடமிருந்து கேட்கவே தாம் அங்கு சென்றதாகக் கூறிய திரு சண்முகம், அவர்கள் இப்போது பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்றார்.

எதிர்மறையான அனுபவங்கள் மற்ற சிங்கப்பூரர்களையும் பாதித்துள்ளதாகவும் அமைச்சர் சண்முகம் கூறினார்.

“வழிபாட்டுத் தலங்களைக் கோட்டைகளாக மாற்ற முடியாது. அவை சுதந்திரமாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

“ஆனால் அதே நேரத்தில், அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்களும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தங்கள் வாழ்க்கையைத் தொடர முடியும். அது உண்மையில் பல்லாண்டுகளாக நாம் கட்டியெழுப்பிய ஒருங்கிணைந்த, இணக்கமான சமூகத்தின் ஒரு பகுதியாகும்,” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்