சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரை ஜோகூர் பாருவில் ஓட்டிய ஆடவர் ஒருவர், அங்கு உள்ளூர் ஓட்டுநரைத் தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
கார் நிறுத்துமிடத்தில் அந்த உள்ளூர் ஓட்டுநர் ஒலிப்பானை எழுப்பியதால் அந்த சிங்கப்பூர் கார் ஓட்டுநர் சினமுற்றதாகத் தெரிகிறது.
புக்கிட் இண்டா கார்டனில் உள்ள கடைத்தொகுதியின் கார் நிறுத்துமிடத்தில் வியாழக்கிழமை (மே 1) மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக சைனா பிரஸ் ஊடகம் தெரிவித்தது.
கார் நிறுத்துமிடத்தில் அந்த சிங்கப்பூர் கார் ஓட்டுநர் சாலையை வழிமறித்ததால் அந்த உள்ளூர் ஓட்டுநர் ஒலிப்பானை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சினமடைந்த அந்த சிங்கப்பூர் கார் ஓட்டுநர், தமது காரிலிருந்து இறங்கி அந்த ஆடவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
அந்த உள்ளூர் ஓட்டுநரின் காரில் இருந்த பயணி, இருவருக்கும் இடையே மூண்ட அடிதடியைப் படமெடுத்தார். அந்த சிங்கப்பூர் கார் ஓட்டுநரை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியது தெரிந்தது.
பின்னர், வழிப்போக்கர் ஒருவர் குறுக்கிட்டு அந்த ஆடவர்களின் அடிதடியை நிறுத்தி, அந்த சிங்கப்பூர் கார் ஓட்டுநரை அவரது காருக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், இருதரப்பினரும் தன்னிடம் புகார் அளித்துள்ளதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.