சிங்கப்பூர் ஃபார்முலா 1 கார் பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், சிங்கப்பூரில் 17வது முறையாக நடக்கும் இரவு நேரக் கார் பந்தயத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சிங்கப்பூர் கிராண்ட் பிரீ அக்டோபர் 9, 10,11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இரவு நேர கார் பந்தயத்தின் ‘தாய்வீடு’ என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் கார் பந்தயம் சவால்மிக்க பந்தயங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பு 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்களுக்கும் சமமாக உள்ளது.
முதல் இடத்திற்குப் போட்டி
கடந்த வாரம் மலேசியாவில் நடந்த கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வாகை சூடினார். அதனால் சிங்கப்பூரிலும் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.
கடந்த சில பந்தயங்களாகவே வெர்ஸ்டாப்பன் நன்கு செயல்பட்டு வருகிறார். அதனால், சிங்கப்பூரிலும் அவரது ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு சிங்கப்பூர் பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் இரண்டாம் இடத்தில் வந்தார். அதனால் இம்முறை முதல் இடத்தைப் பிடிக்க அவர் தீவிரம் காட்டக்கூடும்.
ரசலுக்குத் சோதனை
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வாகை சூடிய மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசலின் நிலைமை சற்று மோசமாக உள்ளது.
மலேசியப் பந்தயத்தில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு இறுதிக்கட்டத்தில் எதிர்பாராதவிதமாக காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அதனால், பந்தயத்தை முடிக்காமலேயே அவர் வெளியேறினார்.
மேலும், புதிய இயந்திரம் பொருத்தப்பட்ட காருடன் ரசல் சிங்கப்பூர் பந்தயத்தில் களமிறங்குகிறார். ஆகையால், விதிமுறைப்படி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பந்தயத்தை ரசல் கடைசி இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.
ஹாமில்டன், நாரிஸ் பலப்பரிட்சை
முன்னிலையில் இருக்கும் மெக்லேரன், ஃபெராரி அணிகள் வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் உள்ளன.
2024ஆம் ஆண்டில் இங்கு வெற்றிபெற்ற மெக்லேரனின் லேண்டோ நாரிஸ் இப்பருவத்தில் தடுமாறி வருகிறார். சிங்கப்பூர் பந்தயத்தை வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்புவதில் அவரது அணியும் உறுதியாக உள்ளது.
அதேபோல், சிங்கப்பூர் கார் பந்தயத்தில் நான்கு முறை வெற்றிபெற்ற ஃபெராரியின் லூயிஸ் ஹேமில்டன் தமது அனுபவத்தைப் பயன்படுத்தி மற்ற வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயலலாம்.
கில்லி கிமி
இப்பருவத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னணி வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி அசத்தி வருகிறார் மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி. அவர் புள்ளிப்பட்டியலில் 320 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
சிங்கப்பூரில் அன்டோனெல்லி வெற்றிபெற்றால் இப்பருவத்தின் வெற்றியாளர் கிண்ணத்தை அவர் வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.
புள்ளிப்பட்டியலில் ரசல் 236 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் 214 புள்ளிகளுடன் ஹேமில்டன் இருக்கிறார்.
யார் வெல்வார்?
சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாரும் தொடர்ந்து இருமுறை வென்றதில்லை. இதனால் இம்முறையும் ஒரு புதிய வெற்றியாளரை எதிர்பார்க்கலாம்.
இரவு நேரம், கணிக்க முடியாத வானிலை, ஏற்ற இறக்கமான சாலை, வெப்பம் எனப் பல்வேறு சவால்கள் இருப்பதால் சிங்கப்பூர் பந்தயத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
