இணையப் பாதுகாப்பு உத்தியை மாற்றுகிறது சிங்கப்பூர்

இணையப் பாதுகாப்பு உத்தியை மாற்றுகிறது சிங்கப்பூர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Sep 2026 - 5:27 pm

2 mins read
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி குவெண்டா ஃபோங்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி குவெண்டா ஃபோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ளூர் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பு முயற்சிகளின் கீழ் கிட்டத்தட்ட 2,000 அரசாங்க அமைப்புகளைச் சிறப்பான முறையில் பாதுகாப்பது நோக்கம்.

‘யுஎன்சி3886’ என்ற மற்றொரு நாட்டின் ஆதரவு பெற்ற இணைய உளவு அமைப்பால் சிங்கப்பூரின் நான்கு முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டமைப்பின் வெளிப்புறத்தைச் சார்ந்த பாதுகாப்பிலிருந்து அச்சுறுத்தல்களைத் தீவிரமாகக் கண்டறியும் நிலைக்கு மாறுவதை இந்நடவடிக்கை காட்டுகிறது.

இந்தத் தாக்குதல் முதன்முதலில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் பொதுவெளியில் தெரியவந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் மேலும் ஊடுருவியிருந்தால், தொலைத்தொடர்பு, இணையச் சேவைகளைப் பாதித்து, தேசியப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

ஊடுருவிகளை வெளிப்புறத்திலேயே தடுத்து நிறுத்துவதையும் தாண்டி நமது பாதுகாப்பு விரிவடைய வேண்டும் என்பதே இச்சம்பவத்தில் இருந்து பெறப்பட்ட முக்கியப் பாடம் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி குவெண்டா ஃபோங் கூறினார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அந்த விவரத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

ஏனெனில் ‘யுஎன்சி3886’ போன்ற நவீன அச்சுறுத்தல் அமைப்புகள் குறிப்பிட்ட இலக்குகளைக் குறிவைக்கின்றன.

“முக்கியத் தகவல் உள்கட்டமைப்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட ஃபாங், “நவீன அச்சுறுத்தல் அமைப்புகள் ஒரு நாட்டின் ஆதரவு பெற்ற இலக்குகளுடன் இயங்குபவை, நீங்கள்தாம் அவர்களின் இலக்கு,” என்று அவர் கூறினார். மேலும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது போதுமானதாக இருக்காது என்றும் அவர் சொன்னார்.

அதற்குப் பதிலாக, ஊடுருவிகள் ஏற்கெனவே ஒரு நிறுவனத்தின் கட்டமைப்புக்குள் நுழைந்துவிட்டதாகக் கருதி, அவர்கள் மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே அவர்களைக் கண்டறிந்து அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

“நீங்கள் உள்வழிச் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். இயல்பற்ற கட்டமைப்பு நடத்தைகளைக் கண்டறிய வேண்டும். அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டும்,” என்றார் திருவாட்டி ஃபோங்.

சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பால் உருவாக்கப்பட்ட புதிய ஏஐ கருவிகள் இந்த வேலைகளில் சிலவற்றைச் செய்யக்கூடியவை.

எந்தெந்த அமைப்புகளில் ஏஐ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூரில் மொத்தம் 11 முக்கியத் தகவல் உள்கட்டமைப்புகள் உள்ளன. அரசாங்கம், ஆகாயப் போக்குவரத்து, சுகாதாரம்,நிலப் போக்குவரத்து, கடல்துறை, ஊடகம், பாதுகாப்பு மற்றும் அவசரச் சேவைகள், நீர், வங்கி மற்றும் நிதி, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவையே அவை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்செயற்கை நுண்ணறிவுஏஐபாதுகாப்புகருவிஅமைப்புதலைமை நிர்வாக அதிகாரி