சிச்சுவான் மாநிலத் தலைநகரிலிருந்து சிங்கப்பூரிலும் அதன் பரந்த வட்டாரத்திலும் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்கள் சீனாவின் செங்டுவில் உள்ள தங்கள் சகாக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவார்கள்.
செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 24) கையெழுத்திடப்பட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ், சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மையம், செங்டு வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை பரிமாற்றங்களை மேம்படுத்துவதிலும், வர்த்தகத் தொடர்புகளை வளர்ப்பதிலும் இணைந்து செயல்படும்.
செங்டுவிற்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின்போது பேசிய சட்ட அமைச்சர் எட்வின் டோங், செங்டுவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும்போது, கணிக்கக்கூடியதாகவும், வர்த்தகங்கள் செழிக்க வழிவகுப்பதாகவும் உள்ள சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.
இதற்கிடையே, செங்டுவில் உள்ள வழக்கறிஞர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் வர்த்தகங்கள், முன்னுரிமைகள், விருப்பங்களைப் புரிந்துகொண்டு செயல்படக்கூடியவர்கள்.
“நாங்கள் இணைந்து செயல்படும்போது, தனிப்பட்ட முறையில் கையாள முடியாத விவகாரங்களைக் கூட எதிர்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுக்கு இன்னும் முழுமையான சேவையை வழங்க முடியும். மேலும், எங்கள் தொழில்முறை செயல்பாடுகள் வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும்,” என்று திரு டோங் கூறினார்.
சிங்கப்பூர் ஒரு நிலையான சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இது வர்த்தகங்களுக்குத் தங்கள் உரிமைகள் குறித்தும், தாங்கள் மேற்கொண்ட கடமைகள் எவ்வாறு நிலைநாட்டப்படும் என்பது குறித்தும் நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூருக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு, வர்த்தகங்களையும் முதலீடுகளையும் கொண்டுவருவதற்கான ஒரு சிறந்த கட்டமைப்பு இருப்பது மட்டுமல்லாமல், தரப்பினரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான தெளிவான கட்டமைப்பு இருப்பதும் அவசியம் என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தோம்,” என்றார்.
நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதை உறுதி செய்வது பொருளியலுக்கு அடிப்படையானது என்று கூறிய திரு டோங், வர்த்தகங்கள் தெளிவான, கவனமான, நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு வலுவூட்டும் ஒரு கட்டமைப்பைச் சட்டக் கொள்கை வகுப்பாளர்கள் பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
